ஒசாமா மறைவிடம் குறித்து பாகிஸ்தான் உளவுத்துறை அறிந்து இருக்கவில்லை -சிஐஏ முன்னாள் இயக்குனர்


ஒசாமா மறைவிடம் குறித்து பாகிஸ்தான்  உளவுத்துறை அறிந்து இருக்கவில்லை -சிஐஏ முன்னாள் இயக்குனர்
x
தினத்தந்தி 24 July 2019 9:46 AM GMT (Updated: 24 July 2019 9:46 AM GMT)

ஒசாமா பின்லேடன் மறைவிடம் குறித்து பாக். உளவுத்துறை அறிந்து இருக்கவில்லை என்று சிஐஏ முன்னாள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் 2011 மே 2-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) சிறப்பு நடவடிக்கையால் கொன்றது. அபோதாபாத்தில் பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்காவிற்கு கூறியது யார்? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியது. 

ஆனால் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் சம்பந்தமாக தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே பாகிஸ்தான் அரசு மறுத்துவந்தது. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? என்பது தொடர்பாக இம்ரான் கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு முதல் முறையாக பிரதமராக பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான்கான், ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது  பாகிஸ்தானின் உளவு அமைப்புதான் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் பற்றிய தகவலை அமெரிக்காவிற்கு அளித்தது. சிஐஏவிடம் கேட்டீர்களென்றால் அவர் இருந்த இடத்தை தொலைபேசி இணைப்பு மூலம் தகவல் அளித்தது ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் என்பதை கூறுவார்கள் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்ரான் கான் வெளியிட்டுள்ள தகவலை சிஐஏவின் முன்னாள் இயக்குனர் டேவிட் பெட்ரேயஸ் மறுத்துள்ளார். இதுபற்றி பெட்ரேயஸ் கூறுகையில், “பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உள்பட, ஒசாமா பின்லேடன் இருப்பிடம் பற்றி யாரும் அறிந்து இருக்கவில்லை. அதை நாங்கள் நன்கு அறிந்து வைத்து இருந்தோம். அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் தங்க பாகிஸ்தான் தான் அனுமதித்தது என்று கூறுபவர்களின் கருத்தில் இருந்து நாங்கள் வேறுபடுகிறோம்” என்றார்.

Next Story