கியூபாவின் வினோத 'ஒலி தாக்குதல்கள்' மக்களின் மூளையை மாற்றுகிறது -ஆய்வில் தகவல்


கியூபாவின் வினோத ஒலி தாக்குதல்கள் மக்களின் மூளையை மாற்றுகிறது -ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 24 July 2019 10:12 AM GMT (Updated: 24 July 2019 10:12 AM GMT)

பாதிக்கப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மூளையை சோதனை செய்ததில் கியூபாவின் வினோத 'ஒலி தாக்குதல்கள்' மக்களின் மூளையை மாற்றுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நியூயார்க்,

கியூபாவின் ஹவானாவில் 2016-ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி  பணியாற்றிய அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் அனுபவித்த "வினோத ஒலி தாக்குதல்"களுக்கு பின்னால் என்ன இருந்தது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. ஆனால் நேற்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில்  தொழிலாளர்களின்  மூளைக்குள் இருந்த மாற்றங்கள் மூலம்  தெரியவருகிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணையில் எஃப்பிஐ அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.

கியூபாவின் தலைநகரான ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து விசித்திரமான பிரச்சினை சிலவற்றை சந்தித்து வருகிறார்கள். சிலர் நாள் முழுக்க தூங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு மனிதர்களால் கேட்க முடியாத ஒலிகள் கூட கேட்டு இருக்கிறது. இப்போதும் கேட்டு வருகிறது. சிலருக்கு உடலில் வித்தியாசமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது.

அங்கு வேலை பார்த்த சிலர் அதிக மனஅழுத்தத்தில் கஷ்டப்பட்டு  இருக்கிறார்கள். பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அவர்கள் தற்கொலை செய்ய முயன்று உள்ளனர். இன்னும் சிலருக்கு கொலை செய்யும் எண்ணங்கள் எல்லாம் எழுந்துள்ளது. மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ச்சியாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு ரிப்போர்டுகள் அனுப்பப்பட்டது.

இந்த தொடர் பிரச்சினையால் மொத்தம் 40 அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 26 பேர் தங்கள் பணியை சென்ற வருட இறுதியில் ராஜினாமா செய்தனர். தொடர் சர்ச்சை நிகழ்ந்து வந்ததை அடுத்து, இது குறித்து விசாரிக்கும்படி அந்நாட்டு எஃப்பிஐ அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு பணியாற்றிய 40 பேரிடம் 23 ஆண்கள் மற்றும் 17 பெண்களின் மூளை எம்.ஆர்.ஐ  ஸ்கேன் செய்யப்பட்டது. இது மூளை அமைப்பு மற்றும் செயல்பாட்டு இணைப்பில் மாறுபாடுகளைக் காட்டியது. இதுபோன்ற நல்லநிலையில் உள்ள 48 பேருடன்  ஒப்பிடும்போது, வெவ்வேறு மூளைப் பகுதிகளுக்கிடையேயான இணைப்புகளை அளவிடுகிறது. ஆகஸ்ட் 2017 முதல் ஜூன் 2018 வரை  மூளை ஸ்கேன் எடுக்கப்பட்டது.

சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் மூளைக்கும் இவர்களின் மூளைக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. நிறைய முக்கிய அணுக்கள் இவர்களின் மூளையில் காணப்படவில்லை என்று அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால் இவர்கள் எல்லோரும் தாக்குதலுக்கு உள்ளானது போலவே தெரியவில்லை. அதே சமயம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது. இதன் மர்மம் என்ன, இதற்கு பின் யார் இருக்கிறார் என்ற எந்த விபரமும் வெளியாகாமல் உள்ளது. 

இவர்களை ஆராய்ச்சி செய்த பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் கதிரியக்கவியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் ராகினி வர்மா கூறும்போது, மூளை குழுக்கள்  முழுவதும் வேறுபாடுகள் இருந்தன, குறிப்பாக சிறுமூளையில் சமநிலை தவறுதல்,  கண் இயக்கம், தலைச்சுற்றல் முதலியன இருந்துள்ளன என  கூறினார்.

மேலும் சம்பவங்களுக்கு முன்பு அவர்களின் மூளை எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க நோயாளிகளின் முந்தைய எம்ஆர்ஐக்கள் அவர்களிடம் இல்லை.

இவர்கள் எல்லோரும் கியூபாவில் தூதரகத்தில் பணியாற்றினார்கள் என்பது மட்டும்தான் இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரே ஒற்றுமை. ஆனால் கியூபா, நாங்கள் அமெரிக்க பணியாளர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. எங்கள் மீது தவறு எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 40 பணியாளர்களுக்கும் என்ன ஆனது. இவர்களின் மூளையில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதில் மர்மம் நிலவி வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையை இந்த மருத்துவ அறிக்கை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இரு குழுக்களுக்கிடையிலான நியூரோஇமேஜிங்கில் "குறிப்பிடத்தக்க" வேறுபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தாலும், நோயாளிகளின் அறிகுறிகளை தாக்குதல்களுடன் இணைக்க முடியவில்லை என்று  கூறுகிறார்கள்.

ஹவானாவில் பாதிக்ப்பட பலர் ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து "தீவிரமாக பலத்த ஒலி"களைக் கேட்டதாகக் கூறினர். அவை "சலசலப்பு" "உலோக  அரைத்தல்" "துளையிடும் சத்தம்" போன்று இருந்ததாக கூறினர்.

இதற்கிடையில், இதுபோன்ற அறிகுறிகளை உணர்ந்ததாகவும் லட்சகணக்கான மக்கள்  தங்கள் அரசாங்கம் மீது வழக்கு தொடுத்து உள்ளதாகவும் கியூபாவில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கனடிய தூதர்கள்  குறிப்பிட்டு உள்ளனர்.

சீனாவில் இதே போன்ற வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கியூபாவில் நடந்ததைப் போலவே தூதரக ஊழியர்களும் காயங்களுக்கு  ஆளாகியதைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஒலியியல் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கு சுகாதார எச்சரிக்கையை விரிவுபடுத்தியது.

Next Story