‘முத்தலாக்’ கூறி விவாகரத்து; காதல் மனைவியை பிரிந்தார் மலேசிய முன்னாள் மன்னர்


‘முத்தலாக்’ கூறி விவாகரத்து; காதல் மனைவியை பிரிந்தார் மலேசிய முன்னாள் மன்னர்
x
தினத்தந்தி 26 July 2019 12:00 AM GMT (Updated: 25 July 2019 9:23 PM GMT)

மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி நடைபெற்று வருகிறது.

கோலாலம்பூர், 

 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்நாட்டில் புதிய மன்னர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அந்நாட்டின் 15–வது மன்னராக, கடந்த 2016–ம் ஆண்டு, 5–ம் சுல்தான் முகமது (வயது 49) முடி சூட்டிக்கொண்டார். அதன் பின்னர் ரஷியா சென்ற அவர், அங்கு ‘மிஸ் மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினாவை (25) காதலித்து 2017–ம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் கசிய தொடங்கியதை அடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் தனது திருமணம் குறித்து வெளியுலகத்துக்கு அவர் தெரியப்படுத்தினார். அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தனது மன்னர் பதவியை துறந்தார். மலேசிய வரலாற்றில் மன்னர் ஒருவர் முடி துறப்பது இதுதான் முதல் முறை என கூறப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் மன்னர் 5–ம் சுல்தான் முகமது தனது காதல் மனைவியை ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை உள்ளது. முன்னாள் மன்னரின் விவாகரத்து சான்றிதழ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

திருமணத்துக்கு பிறகும் ஓக்சானா சில ஆண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, முன்னாள் மன்னர் அவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ‘‘இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என ஓக்சானா தெரிவித்துள்ளார். மேலும், இப்போதும் 5–ம் சுல்தான் முகமதுதான் தனது கணவர் என்று கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.


Next Story