மியான்மர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு


மியான்மர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Aug 2019 8:01 AM GMT (Updated: 12 Aug 2019 8:01 AM GMT)

தென்கிழக்கு மியான்மரில் நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாங்கூன், 

மியான்மர் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால்  ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து  நிலச்சரிவில் சிக்கிய 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது மேலும் 19 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை காலை மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதால், இறப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் மோன் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 12,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 38,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும்  ஐ.நா.தெரிவித்துள்ளது.

Next Story