இணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்


இணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்
x
தினத்தந்தி 20 Aug 2019 9:42 PM GMT (Updated: 21 Aug 2019 12:14 AM GMT)

இணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் இந்தியர் ஒருவர் தூக்கம் தொலைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துபாய்,

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்சில் ‘சேக்ரட் கேம்ஸ்’ என்ற தொடரின் 2-வது சீசன் அண்மையில் வெளியானது. ‘சேக்ரட் கேம்ஸ்’ தொடரின் முதல் சீசனுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்த நிலையில், 2-வது சீசனும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2-வது சீசனின் முதல் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. அதில், அந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான சுலைமான் இஷா என்ற தாதாவின் செல்போன் எண் என 10 இலக்க எண்கள் காட்டப்பட்டது. ஆனால் அந்த செல்போன் எண் உண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியரான குன்கப்துல்லா (வயது 37) என்பவருக்கு சொந்தமானது.

ஆனால் ‘சேக்ரட் கேம்ஸ்’ ரசிகர்களோ சுலைமான் இஷாவிடம் பேச வேண்டும் என்கிற ஆர்வத்தில் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் தொடர்ச்சியாக குன்கப்துல்லாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அவரிடம் “நீங்கள் சுலைமான் இஷா தானே” என கேட்டதால் அவர் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

தொடர் செல்போன் அழைப்புகளால் தனது தூக்கம் தொலைந்ததோடு, செல்போன் சத்தம் கேட்டாலே ஒரு வித பயஉணர்வு ஏற்படும் நிலைக்கு தான் தள்ளப்பட்டு விட்டதாக அவர் வருத்ததுடன் கூறினார். மேலும் அவர், “நான் எனது செல்போன் எண்ணை ரத்து செய்ய விரும்புகிறேன். இந்த பிரச்சினை நீங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

இதற்கிடையில், “தொடர் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே, குன்கப்துல்லா செல்போன் எண்ணை நீக்கிவிட்டோம். இதனால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்” என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story