காஷ்மீர் விவகாரம்: மத்தியஸ்தம் செய்யத் தயார்; மீண்டும் அதிபர் டிரம்ப் பிடிவாதம்


காஷ்மீர் விவகாரம்: மத்தியஸ்தம் செய்யத் தயார்;   மீண்டும் அதிபர் டிரம்ப் பிடிவாதம்
x
தினத்தந்தி 21 Aug 2019 5:38 AM GMT (Updated: 21 Aug 2019 5:38 AM GMT)

பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்ப முயன்றது.

இதனையடுத்து சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் அரசாங்கம் முறையிட்டது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான பிரான்ஸின் உதவியை நாடும் விதமாக பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லெட்ரியனிடம் தொலைபேசியில் உரையாடினார். 

ஜி 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளும் பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க உள்ளன.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டிற்கு நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். டிரம்பிடம் தொலைபேசியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் மூன்றாம் நாடு தலையிட இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இப்பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கா, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு சமரசம் செய்ய விரும்புவதாக அதிபர் டிரம்ப் நேற்று பத்திரிகை ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்றும் நீண்ட காலமாகவே இந்து-முஸ்லிம் பிரச்சினை இந்தியாவில் இருப்பதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரிடமும் தாம் தொலைபேசியில் பேசியதாகவும் இருவரும் சிறந்த மனிதர்கள், தமக்கு நல்ல நண்பர்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்புடனான உரையாடலில் பிரதமர் மோடி பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விதிவிலக்கு இல்லாமல் தவிர்த்தார் என்று பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"பிராந்தியத்தில் சில தலைவர்களின் தீவிர பேச்சு மற்றும் இந்திய எதிர்ப்பு வன்முறைக்கு தூண்டுதல் அமைதிக்கு உகந்ததல்ல" என்று பிரதமர்  கூறினார்.

Next Story