ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது


ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
x
தினத்தந்தி 22 Aug 2019 8:23 AM GMT (Updated: 22 Aug 2019 8:23 AM GMT)

ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளப்பள்ளி. கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த கூட்டணியின் கேரள அமைப்பாளராகவும் உள்ளார். இவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அஜ்மானில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி  வந்தார். 10 வருடங்களுக்கு முன், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் நிறுவனத்தை விற்றுவிட்டார்.

இதில், நஸில் அப்துல்லா என்பவருக்கு ரூ.19 கோடி தரவேண்டியது இருந்ததாம். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர். இதற்காக தேதி குறிப்பிடாத காசோலை ஒன்றை துஷார் வெள்ளப்பள்ளி கொடுத்தார். ஆனால், அந்த காசோலை பணமின்றி திரும்பி வந்தது.

இந்நிலையில் நஸில் அப்துல்லா, இதுதொடர்பாக பேச வருமாறு, துஷார் வெள்ளப்பள்ளியை அஜ்மானுக்கு அழைத்தார். அதன்படி நேற்று அங்கு சென்றார் துஷார் வெள்ளப்பள்ளி. ஓட்டல் ஒன்றில் பண விவகாரம் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால், அஜ்மான் போலீசில், நஸில் அப்துல்லா புகார் செய்தார். புகாரின் பேரில் துஷார் வெள்ளப்பள்ளியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story