தாய்லாந்தில் வினோதம்: மூதாட்டியின் வயிற்றில் கற்குவியல்


தாய்லாந்தில் வினோதம்: மூதாட்டியின் வயிற்றில் கற்குவியல்
x
தினத்தந்தி 23 Aug 2019 10:30 PM GMT (Updated: 23 Aug 2019 9:17 PM GMT)

தாய்லாந்தில், மூதாட்டியின் வயிற்றில் கற்குவியல் இருந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாங்காக்,

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள நாங் காய் மாகாணத்தின் தலைநகர் நாங் காயை சேர்ந்த 60 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மூதாட்டியின் வயிற்றில் உள்ள பித்தப்பையில் நூற்றுக்கணக்கான கற்கள் குவியலாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்துபோயினர். அதை உறுதி செய்வதற்காக ‘லேப்ராஸ்கோப்’ மற்றும் சிறிய ரக கேமிரா ஒன்றினை அந்த பெண்ணின் வயிற்றில் உள்ளே செலுத்தி சோதனை செய்தனர்.

அதில் மூதாட்டியின் வயிற்றில் இருப்பது கற்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 40 நிமிடத்துக்கும் மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூதாட்டியின் வயிற்றில் இருந்த கற்கள் அனைத்தையும் அகற்றினர். ஒட்டுமொத்தமாக சிறிய மற்றும் பெரிய அளவிலான 1,898 கற்களை வயிற்றில் இருந்து அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story