இலங்கையில் நடந்த யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி - இந்திய எம்.பி.க்கள் முறியடித்தனர்


இலங்கையில் நடந்த யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி - இந்திய எம்.பி.க்கள் முறியடித்தனர்
x
தினத்தந்தி 4 Sep 2019 10:51 PM GMT (Updated: 4 Sep 2019 10:51 PM GMT)

இலங்கையில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் அதை இந்திய எம்.பி.க்கள் முறியடித்து விட்டனர்.

கொழும்பு,

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு காஷ்மீர் மாநிலம் எளிய இலக்காக திகழ்ந்து வந்தது. இந்த நிலையில், அந்த மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி, தனது நேரடி கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்தது. இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கும் பேரிடியாக அமைந்தது. மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு பெரும் கலக்கத்தை அளித்துள்ளது.

இதன் காரணமாக இந்த பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் படாத பாடு படுகிறது. ஆனால் இந்தியா, இது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என சர்வதேச நாடுகளிடம் தெளிவுபடுத்தி விட்டது.

ஏற்கனவே கடந்த மாதம் பாகிஸ்தானுக்காக சீனா விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ஆனால் மூடிய அரங்கில்தான் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவும் இல்லை. அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இது பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தோல்வியாக அமைந்தது.

இதேபோன்று மாலத்தீவில் நடந்த தெற்காசிய சபாநாயகர்கள் மாநாட்டிலும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சித்து அதிலும் பின்னடைவைத்தான் சந்தித்தது.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான யுனிசெப் தெற்காசிய நாடாளுமன்ற மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை மனித உரிமை பிரச்சினையாக்கி எழுப்புவதற்கு பாகிஸ்தான் எம்.பி.க்கள் முயற்சித்தனர்.

ஆனால் இந்திய எம்.பி.க்கள் அந்த முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், சிறுபான்மையினர் உரிமை பிரச்சினையில் பாகிஸ்தானை கடுமையாக சாடினார். மனித உரிமைகள் தொடர்பான பாகிஸ்தானின் நிலவரத்தையும், சிறுபான்மையினர் படும் துன்பங்களையும், மத நிந்தனை சட்டத்தை பயன்படுத்தி நடக்கிற அட்டூழியத்தையும் அவர் நினைவுபடுத்தினார். கோகாய் தொடர்ந்து பேசும்போது, “ குழந்தைகள் உரிமைகள் தொடர் பான யுனிசெப் மாநாட்டில், காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச விவகாரம் ஆக்க பாகிஸ்தான் முயற்சித்தது, துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

மேலும், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா; அந்த வகையில் இந்தியாவின் குரல் தான் கேட்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாரதீய ஜனதா எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வாலும் பாகிஸ்தானுக்கு குட்டு வைத்தார்.

இது காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு தோல்வி மேல் தோல்வியாக வந்து அமைந்துள்ளது.


Next Story