அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
x
தினத்தந்தி 25 Sep 2019 12:00 AM GMT (Updated: 24 Sep 2019 10:34 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

நியூயார்க், 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே இருவரும் 2 நாள் முன்னதாக ஹூஸ்டன் நகரில் ‘நலமா மோடி’ நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டு பேசினார்கள். அதன் பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதில் இருநாட்டு நல்லுறவு மற்றும் சில ஒப்பந்தங்கள் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி டுவிட்டரில், “டிரம்ப் இந்தியாவின் சிறந்த நண்பர்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல டிரம்ப் கூறும்போது, “இந்தியாவுடன் வெகு விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத், கொலம்பியா அதிபர் இவான் டியூக் மார்கியூஸ், நைஜர் அதிபர் இசவ்பவ் முகமது, நமீபியா அதிபர் ஹஜே ஜெயிங்காப், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

கத்தார் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியர்களின் பங்களிப்புக்காக கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் நன்றி தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றியும் பேசப்பட்டது.

நைஜர் நாட்டில் மகாத்மா காந்தி சர்வதேச மாநாட்டு மையம் அமைப்பதற்கு இந்தியா 35 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 245 கோடி) வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாயம், சூரிய மின்சக்தி துறைகளில் இந்தியா, நைஜர் இடையே ஒத்துழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டேயுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியபோது, பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பது பற்றி பேசப்பட்டது.

ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போரேயையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பயங்கரவாத தடுப்பு தொடர்பான தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு நிதி மற்றும் ஆயுதங்களைப் பெற அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினார். உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றாலும், அதை பயங்கரவாத தாக்குதலாகத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய நல்லது, கெட்டது, பெரியது, சிறியது என்ற அளவில் பார்க்கக்கூடாது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு எதிராக உள்ள ஒற்றுமையை, பயங்கரவாத ஒழிப்பிலும் காட்டவும், பயங்கரவாதத்துக்கு எதிராக தயார் நிலையில் இருக்கவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

Next Story