குழந்தை திருமணத்துக்கு எதிராக போராடும் 17 வயது இந்திய பெண்ணுக்கு பில்கேட்ஸ் விருது


குழந்தை திருமணத்துக்கு எதிராக போராடும் 17 வயது இந்திய பெண்ணுக்கு பில்கேட்ஸ் விருது
x
தினத்தந்தி 25 Sep 2019 11:45 PM GMT (Updated: 25 Sep 2019 10:35 PM GMT)

இந்தியாவை சேர்ந்த 17 வயது பெண், குழந்தை திருமண முறைக்கு எதிராகவும், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி போராடி வருகிறார். அவர், பாயல் ஜாங்கிட் ஆவார்.

நியூயார்க், 

பாயல் ஜாங்கிட்டுக்கு இதற்காக ‘சேஞ்ச்மேக்கர்’ விருது வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மிலிந்தா அறக்கட்டளை அறிவித்தது.

நியூயார்க் நகரில் பில்கேட்ஸ் முன்னிலையில் நடந்த விழாவில் அவருக்கு ‘சேஞ்ச்மேக்கர்’ விருதை ஐ.நா. சபையின் தலைமை துணைச்செயலாளர் ஆமினா முகமது வழங்கி கவுரவித்தார்.

பாயல் ஜாங்கிட், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹின்ஸ்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

இந்த கிராமத்தில் பெண் பிள்ளைகள், வீடுகளை விட்டு வெளியே அனுப்பப்படுவதில்லை. சீக்கிரமே குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

பாயல் ஜாங்கிட்டுக்கும் அவ்வாறு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயன்றபோது அவர் அங்குள்ள சமூக ஆர்வலர் ஒருவரை சந்தித்து பேசி, அவர் மூலம் தனது பெற்றோரை சம்மதிக்க வைத்து குழந்தை திருமணம் என்ற சமூக கொடுமையில் இருந்து தப்பி உள்ளார்.

இப்போது குழந்தை திருமணம் கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தி வருகிற இவர், குழந்தைகளை பெற்றோர் படிக்க வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

இதுபற்றி அவர் பேசுகையில், “நாங்கள் பேரணிகள் நடத்துகிறோம். சுவரொட்டி இயக்கம் நடத்துகிறோம். வீடு வீடாக சென்று குடும்பத்தினரிடம் பேசுகிறோம். கல்வி பெறும் உரிமையில் இருந்து பெண் பிள்ளைகள் தடுக்கப்படுவது தவறு என்பதை எடுத்துச்சொல்கிறோம். இதற்காக நாங்கள் பெரும்போராட்டத்தையே சந்திக்க வேண்டியது வருகிறது” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாதபோது, அவர்கள் சமூகத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று கூறினார்.

இந்தப் பெண் அவரது கிராமத்தில் குழந்தைகள் நாடாளுமன்றத்தின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் மூலம் பொது பிரச்சினைகளை அவர் உள்ளாட்சி அமைப்பின் தலைவருக்கு எடுத்துச்சென்று தீர்வு காண முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story