இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும்: ‘ரபேல்’ விமானத்தில் அதிநவீன ஏவுகணைகள் - பிரான்ஸ் நிறுவனம் புதிய தகவல்கள்


இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும்: ‘ரபேல்’ விமானத்தில் அதிநவீன ஏவுகணைகள் - பிரான்ஸ் நிறுவனம் புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:30 PM GMT (Updated: 6 Oct 2019 11:22 PM GMT)

‘ரபேல்’ விமானத்தில் உள்ள அதிநவீன ஏவுகணைகளால் இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

பாரீஸ்,

இந்திய விமானப்படைக்கு அதிநவீன ‘ரபேல்’ விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டு அரசுடன் இந்தியா 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

முதலாவது ‘ரபேல்’ விமானம், நாளை (செவ்வாய்க்கிழமை) ஒப்படைக்கப்படுகிறது. பாரீசில் உள்ள ஒரு விமான தளத்தில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முறைப்படி விமானத்தை பெற்றுக்கொள்கிறார்.

இதற்கிடையே, இந்த விமானத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் இந்திய தலைவர் லூயிக் பீய்டிவச்சே, விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ரபேல் விமானத்தில் அதிநவீன ஆயுத தளவாடங்கள் உள்ளன. அவற்றில் ‘மீட்டேர்’, ‘ஸ்கால்ப்’ ஆகிய ஏவுகணைகள் முக்கியமானவை. மீட்டேர் ஏவுகணை, விமானத்தில் இருந்து பாய்ந்து சென்று வானத்தில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்ல அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடியது.

எல்லா வானிலையையும் சமாளித்து செயல்படும். அதிநவீன ரேடார் வழிகாட்டலுடன் இயங்கும். ஜெட் விமானங்கள் முதல் சிறிய ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ரக ஏவுகணைகள் வரை தாக்கவல்லது.

இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் சந்திக்கும் பொதுவான அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், ‘ஸ்கால்ப்’ ஏவுகணை, ஆழ்ந்து தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு இவற்றை பயன்படுத்தலாம். இங்கிலாந்து ராயல் விமானப்படை, பிரான்ஸ் விமானப்படை ஆகியவற்றில் இந்த ஏவுகணை உள்ளது. வளைகுடா போரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஏவுகணைகளால் இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும். வான் மண்டலத்தில் இந்தியாவின் மேலாதிக்கம் வளரும். இந்திய விமானப்படைக்கு இவை திருப்புமுனையாக அமையும்.

இந்தியா எங்களது ராணுவ கூட்டாளி. இந்தியாவின் தேவைக்கு ஏற்ற தொழில்நுட்பமும், அறிவும் எங்களிடம் உள்ளது. அவற்றை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். இந்தியாவின் முப்படைகளுக்கு கடந்த 50 ஆண்டுகளாக ஏவுகணைகள் வினியோகித்து வருகிறோம். அதன் தேவைகளை பூர்த்தி செய்ய ஆவலாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பாதாரியா, ரபேல் விமானத்தின் சிறப்பு அம்சங்களை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.


Next Story