நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி


நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி
x
தினத்தந்தி 15 Dec 2019 7:19 AM GMT (Updated: 15 Dec 2019 7:19 AM GMT)

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.

காத்மாண்டு,

நேபாளத்தில் உள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள சுன்கோஷி பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் பேருந்து ஒன்று சாலைக்கு அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் காலின்சவுக் பகுதியில் உள்ள புனித தளத்தில் இருந்து பக்தாபூர் நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்த வழியில் இருக்கும் ஆபத்தான வளைவு ஒன்றில் திரும்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசமான சாலைகள் மற்றும் ஆபத்தான வளைவுகளால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story