அதிக வெப்பத்தை தாங்க கூடியவை: கூடங்குளம் அணு உலைக்கு சிறப்பு வால்வுகள் - விரைவில் பொருத்தப்படுகிறது


அதிக வெப்பத்தை தாங்க கூடியவை: கூடங்குளம் அணு உலைக்கு சிறப்பு வால்வுகள் - விரைவில் பொருத்தப்படுகிறது
x
தினத்தந்தி 17 Dec 2019 11:23 PM GMT (Updated: 17 Dec 2019 11:23 PM GMT)

அதிக வெப்பத்தை தாங்க கூடிய வகையில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு சிறப்பு வால்வுகள் ரஷியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அணு மின் நிலையத்தில் பொருத்தப்பட உள்ளது.

மாஸ்கோ,

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகுகளில் அதிக வெப்பத்தை தாங்க கூடிய சிறப்பு வால்வுகளை ‘பெற்றோஜவோத்ஸ்க்’ என்ற ரஷிய நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நாட்டின் அரசு அணு மின் கழகமான ‘ரொசாட்டம்’ சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு அணு மின் உற்பத்தி நிலைய உலையில் இருந்து வெளியேறும் உயர் அழுத்த நீராவியின் இயக்க ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் டர்பைன்களில் பலவிதமான வால்வுகள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது கூடங்குளத்துக்கு 350 டிகிரி உயர் வெப்பத்திலும் செயல்படும் ‘ஸ்விங் செக் வால்வுகள்’ 6-ம், ‘வெட்ஜ் கேட் வால்வுகள்’ 12-ம் தேவைப்படுகின்றன.

அணு உலையின் உயர் வெப்பத்தால் சூடான நீராவியை கொண்டு செல்லும் குழாய்கள், அதன் அதீத அழுத்ததால் எந்த கணத்திலும் உடைந்து விடாமல் இருக்கவும், தேவையான நேரத்தில் திறந்து தானே மூடிக்கொள்ளும் வகையிலும் வால்வுகள் வடிவமைக்கப்படுகின்றன.

அதுபோன்ற சிறப்பு வால்வுகள் ‘ரொசாட்டம்’ எந்திர உபகரணங்கள் தயாரிப்பு பிரிவின் ‘ஆட்டோமெனோர்க்கோமெஷ்’ என்ற நிறுவனத்தின் அங்கமான ‘பெற்றோஜவோத்ஸ்க்’ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த வால்வுகள் உயர்அழுத்த நீரைக்கொண்டு தொழிற்சாலைகளில் நடத்தப்படும் பரிசோதனைகளை கடந்து தனது வலிமையை நிருபித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்திருந்த நிபுணர்கள் இந்த வால்வின் தரத்தை ஏற்றுக்கொண்டனர்.

தயார் நிலையில் உள்ள இந்த வகை வால்வுகள் விரைவில் கூடங்குளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொருத்தப்படும். இந்த வால்வுகள் அணுமின்நிலையத்தில் உள்ள குறைந்த மற்றும் உயர் அழுத்த திரவங்களை கொண்டு செல்லும் குழாய்களில் பொருத்துவதற்கு ஏற்ற திறன் கொண்டவை ஆகும். எனவே தேவையான எந்த இடத்திலும் இதனை பயன்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story