இனி பாகிஸ்தானுக்குள் செல்லாமல் இந்தியாவில் இருந்தே தீவிரவாதிகள் முகாம்களை அழிக்கலாம் -ராஜ்நாத் சிங்


இனி பாகிஸ்தானுக்குள் செல்லாமல் இந்தியாவில் இருந்தே தீவிரவாதிகள் முகாம்களை அழிக்கலாம் -ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 18 Dec 2019 7:19 AM GMT (Updated: 18 Dec 2019 7:19 AM GMT)

ரபேல் போர் விமானம் இருப்பதால் இனி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குள் செல்ல தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே அவற்றை அழித்து விடலாம் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

நியூயார்க்,

இந்தியா - அமெரிக்கா இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நாளை நடக்கிறது. இதற்காக அங்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர்  கூறியதாவது:-

இந்தியாவின் இராணுவ வலிமை அதிகரித்து வருகிறது. இந்தியா விரும்பினால், அது பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள்  பகுதிகளைத் தாக்கியிருக்கலாம், ஆனால் அது பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும். பயங்கரவாத பயிற்சி முகாம்கள் உள்ள இடங்களை  மட்டுமே குறிவைத்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கு ஒரு குடிமகன் கூட கொல்லப்படவில்லை, எந்த பாகிஸ்தான் இராணுவ தளத்தையும்  நாங்கள் தாக்கவில்லை. ஒரு நாட்டின் இறையாண்மையை நாம் ஒருபோதும் தாக்க விரும்பவில்லை. இது எங்கள் குணம்.

தற்போது, இந்திய ராணுவம் முதல் ரபேல் போர் விமானத்தை பெற்றுள்ளது. இனி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குள் செல்ல தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே அவற்றை அழித்து விடலாம்.  

பாகிஸ்தானுடன் எப்போதும் சுமூக உறவையே இந்தியா நாடி உள்ளது. வாஜ்பாய் ஆட்சியில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார். பதிலுக்கு பரிசாக கார்கில் போரை கொடுத்தனர். பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடன் சுமூக உறவை விரும்பினார். இப்போதும் பதிலுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவர் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story