அமேசான் காட்டில் உலகிலேயே உயரமான மரம்


அமேசான் காட்டில் உலகிலேயே உயரமான மரம்
x
தினத்தந்தி 19 Dec 2019 10:45 PM GMT (Updated: 19 Dec 2019 6:49 PM GMT)

பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் பிரேசில் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்கள் மரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பிரேசிலியா, 

அமேசான் காடுகளின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள ஜாரி ஆற்றங்கரையில் உலகிலேயே மிக உயரமான மரம் வளர்ந்திருப்பதை  அப்போது கண்டுபிடித்தனர்.

‘டினிசியா எக்சல்சா’ என்று அழைக்கப்படும் அந்த மரம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரங்களின் குழுவின் ஒரு பகுதி என தெரியவந்துள்ளது. ‘டினிசியா எக்சல்சா’ தற்போது 290 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது.

இந்த வகை மரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 40 டன் வரையிலான கார்பன் டை ஆக்சைடு சேமிக்கும் திறன் கொண்டவை என்றும், எனவே மனிதர்களால் ஏற்படும் காற்று மாசுக்கு எதிரான போரில் இந்த மரம் விலைமதிப்பற்ற வளமாக இருக்கும் என்றும் தாவரவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஜாரி ஆற்றங்கரையில் இதேபோல் பல மரங்கள் 100 அடிக்கு மேல் வளர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சிக்காக அமேசான் மழைக்காடுகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். 

Next Story