பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை - சவுதி அரேபியா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை - சவுதி அரேபியா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:11 AM GMT (Updated: 23 Dec 2019 9:28 PM GMT)

சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

ரியாத்,

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி. இவர் சவுதி அரேபிய அரசையும், அந்த நாட்டின் மூத்த தலைவர்களையும் விமர்சித்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, ஜமால் சென்றார். அதன் பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது.

மேலும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின் பேரிலேயே இந்த கொலை நடந்ததாக துருக்கி குற்றம் சாட்டியது.

இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜமால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் அவரது உடல் கிடைக்காததால் அவரது கொலை பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன.

அதனை தொடர்ந்து, ஜமால் கொலையில் உள்ள பல மர்மமான விஷயங் களை துருக்கி அரசும், அந்நாட்டு ஊடகங்களும் கண்டுபிடித்து, வெளியிட்டன.

ஜமால் கொலை செய்யப்பட்டு, அவரின் விரல் சவுதி மன்னருக்கு பரிசாக அளிக்கப்பட்டது; ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, சூட்கேசில் அடைக்கப்பட்டு, சவுதி தூதர் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டது போன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகின.

மேலும், துருக்கில் உள்ள சவுதி தூதரகத்தில்தான் கசோக்கி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி, அவரது கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் தான் காரணம் என தன் தரப்பு வாதங்களை துருக்கி பதிவு செய்தது.

ஆனால், துருக்கியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து நிராகரித்துவந்த சவுதி அரேபியா திடீர் திருப்பமாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஜாமல் கொலைக்கு பொறுப்பு ஏற்று கொண்டது.

அதே சமயம் சவுதி அரேபியா அரசுக்காக பணியாற்றும் தனிநபர்களால் இந்த கொலை நடந்ததாகவும், தனது உத்தரவின் பேரில் நடந்ததாக கூறுவது முற்றிலும் பொய் என்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறினார். அதனை தொடர்ந்து ஜாமல் கொலை தொடர்பாக சவுதி அரேபியாவில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூத்த அரசு அதிகாரிகள் 5 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட 21 பேரில் 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் தலைநகர் ரியாத்தில் குற்றவியல் கோர்ட்டு விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை மூடிய அறைக்குள் மிகவும் ரகசியமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் ஜமால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து ரியாத் குற்றவியல் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் 3 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் சவுதி அரேபியா புலனாய்வு துறை துணை தலைவர் அஹமத் ஆசிரி மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் மூத்த உதவியாளரான சவுத் அல் கஹ்தானி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் இருவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Next Story