உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கோலாகலக் கொண்டாட்டம்; கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கோலாகலக் கொண்டாட்டம்; கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2019 5:20 AM GMT (Updated: 25 Dec 2019 5:20 AM GMT)

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கோலாகலக் கொண்டாட்டம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

வாடிகன்,

ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. ஏசுபிரான் பிறந்த இடமான பெத்லஹேமில் நடத்தப்பட்ட நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 பாலஸ்தீனம் அருகே உள்ள மேற்குக் கரைப் பகுதியில் உள்ள மேங்கர் சதுக்கத்தில் ஏசு பிறந்ததாகக் கருதப்படும் சர்ச் ஆப் நேட்டிவிட்டி தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் இருந்த மிகவும் பழமையான மணி இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் முகமது சதய்யே ஆகியோரும் பங்கேற்றனர்.

வாட்டிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்ஸிஸ் பங்கேற்றார்.உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் போப்பாண்டவரின் அருளுரையைக் கேட்க திரண்டிருந்தனர். கூட்டத்தினரிடையே பேசிய போப் பிரான்சிஸ், கடவுளின் அன்பு நிபந்தனையற்றது என்று கூறினார். மேலும் நாம், குழப்பங்களை ஏற்படுத்தினாலும் கடவுள் தனது அன்பை வழங்குவதில் ஒருபோதும் குறை வைத்ததில்லை என்று குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் நள்ளிரவுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. திருப்பலி நிகழ்ச்சியில் திரளானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இயேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை சாந்தோம் பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரார்த்தனையில் பங்கேற்றபின் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் திரண்டிருந்த மக்கள் நள்ளிரவில் இயேசுவின் பிறப்பை உற்சாகமாக வரவேற்றனர்.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க மறைமாவட்ட புதிய பி‌‌ஷப் அந்தோணி சாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குருமட அதிபர் டெரன்ஸ், பங்கு தந்தை ராஜே‌‌ஷ் மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர். இரவு 12 மணிக்கு வானில் இருந்து நட்சத்திரங்கள் இறங்கி வருவது போல், அங்கு ஏசு கிறிஸ்து பிறந்திருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு சென்று அனைவரும் ஏசு கிறிஸ்துவை வழிபட்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதிய விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

Next Story