மரத்தில் கார் மோதி கோர விபத்து: இந்திய மாணவர்கள் 2 பேர் பலி


மரத்தில் கார் மோதி கோர விபத்து: இந்திய மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 Dec 2019 9:38 PM GMT (Updated: 25 Dec 2019 9:38 PM GMT)

துபாயில், மரத்தில் கார் மோதிய கோர விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக வந்திருந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துபாய்,

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரோஹித் கிருஷ்ணகுமார் (வயது 19) மற்றும் சரத்குமார் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்களது குடும்பத்தினர் தற்போது துபாயில் வசித்து வருகின்றனர்.

இதில், ரோஹித் கிருஷ்ணகுமார் இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதேபோல சரத்குமார் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

பல்கலைக்கழகத்தில் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் குடும்பத்தினருடன் விடு முறையை கழிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய் வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை போக்கிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மற்ற நண்பர்களை சந்திப்பதற்காக காரில் சென்றனர்.

பின்னர் நண்பர்களை சந்தித்து விட்டு இருவரும் நேற்று அதிகாலை 3 மணியளவில் காரில் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். துபாய் ஜெபல் அலி பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையில் தறிகெட்டு ஓடிய கார், சிறிது நேரத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த ரோஹித் கிருஷ்ணகுமார் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story