நைஜீரிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 19 இந்தியர்கள் விடுதலை: காவலில் இருந்தபோது ஒருவர் மரணம்


நைஜீரிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 19 இந்தியர்கள் விடுதலை: காவலில் இருந்தபோது ஒருவர் மரணம்
x
தினத்தந்தி 19 Jan 2020 9:56 PM GMT (Updated: 19 Jan 2020 9:56 PM GMT)

நைஜீரிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 19 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். காவலில் இருந்தபோது ஒருவர் மரணம் அடைந்தார்.

அபுஜா,

ஆப்பிரிக்க கடல் பகுதியில், கடந்த மாதம் 15-ந் தேதி, ‘எம்.டி. ட்யூக்’ என்ற வர்த்தக கப்பலில் 20 இந்தியர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கப்பல் சிப்பந்திகள் ஆவர்.

நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, நைஜீரிய கடற்கொள்ளையர்கள், அந்த கப்பலை வழிமறித்தனர்.

கப்பலில் இருந்த 20 இந்தியர்களையும் சிறைபிடித்து கடத்திச் சென்றனர். இந்தியர்களை உயிருடன் மீட்க நைஜீரிய தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய தூதரகம் முயற்சி மேற்கொண்டது. நைஜீரிய அரசை தொடர்பு கொண்டு பேசி வந்தது.

ஒரு மாதம் கடந்த நிலையில், இதற்கு பலன் கிடைத்துள்ளது. 19 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், ஒரு இந்தியர், காவலில் இருந்தபோதே மரணம் அடைந்து விட்டார்.

இந்த தகவலை அபுஜாவில் உள்ள இந்திய தூதரகம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க இந்திய அரசும், இந்திய தூதரகமும் முன்னுரிமை அளித்தன. நைஜீரிய அரசை தொடர்பு கொண்டு முயற்சி செய்தோம். அதனால், 19 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர், காவலில் இருந்தபோது மரணம் அடைந்து விட்டார். அதற்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். 19 பேரும் விரைவில் தாயகம் திரும்ப தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story