பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு: சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்


பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு: சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்
x
தினத்தந்தி 26 Jan 2020 11:30 PM GMT (Updated: 26 Jan 2020 10:36 PM GMT)

அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

பீஜிங்,

சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளது. ஆஸ்பத்திரிகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிவதால், புதிதாக சிகிச்சைக்கு வருபவர்கள் நாட்கணக்கில் காத்திருக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்தன.

அத்துடன் இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 56 ஆக உயர்ந்தது. அங்கு 2,684 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதில் 1975 பேரை வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கும் அவர்களில் 324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலின் மையமாக விளங்கும் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் நேற்று முன்தினம் வரை 1052 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 129 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதைப்போல தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் வரை 51 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். பெரிய நகரமான ஷாங்காயில் 40 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வைரஸ் தாக்குதலின் வீரியம் மிகுந்த உகான் உள்ளிட்ட நகரங்களில் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற வருவோர் டாக்டரை பார்ப்பதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

உகான் நகரில் உள்ள சில மருத்துவமனைகளில் 2 நாட்களாக நீண்ட வரிசையில் பலர் காத்திருப்பதாகவும், அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே நாற்காலிகளை கொண்டு வந்து அங்கேயே அமர்ந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் 2 புதிய மருத்துவமனைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை உகான் நகர நிர்வாகம் தொடங்கி உள்ளது. இதில் 1000 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனைக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி இந்த வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதைப்போல விரைவில் தொடங்க உள்ள 1300 படுக்கைகள் கொண்ட அடுத்த மருத்துவமனைக்கான பணிகளையும் 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் நகரில் உள்ள 24 பொது மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு உள்ளன.

இதைத்தவிர ராணுவத்தை சேர்ந்த 450 பேர் அடங்கிய மருத்துவக்குழுவினர் நகரில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்கள் ஏற்கனவே சார்ஸ் மற்றும் எபோலா போன்ற வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர்.

நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையை சீன விஞ்ஞானிகள் முடுக்கி விட்டு உள்ளனர்.

இவ்வாறு நோய்க்கு சிகிச்சை மற்றும் மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் இந்த நோய் பரவுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அதன்படி உகான் நகர் உள்பட ஹுபெய் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல நாட்டிலேயே முதல் முறையாக குவாங்டாங் மாகாணத்தின் சாண்டோவ் நகரம் பாதி மூடப்பட்டு உள்ளது. அங்கு பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து மூலம் வந்து சேரும் வெளிநகரத்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

மேலும் அந்த நகரை சேர்ந்தவர்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரில் 2 பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த மாகாணம் முழுவதும் 98 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உகான் நகரில் உள்ள விலங்கு சந்தை ஒன்றில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. எனவே இந்த நோய் கட்டுக்குள் வரும்வரை நாடு முழுவதும் விலங்கு வர்த்தகத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. விலங்குகளை திரட்டுதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டது.

சீனாவில் நேற்று முன்தினம் நிலவு புத்தாண்டு தினமாகும். அவர்களின் மிகவும் முக்கியமான பண்டிகையான இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால் களையிழந்தன. நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த கொண்டாட்டங்களை அவர்கள் தவிர்த்தனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் அண்டை நாடுகளிலும் பரவி வருகிறது. அந்தவகையில் ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், சிங்கப்பூர், நேபாளம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Next Story