இத்தாலியில் கொரோனா வைரஸ் பீதி: 7 ஆயிரம் பேருடன் வந்த கப்பல் தடுத்து நிறுத்தம்


இத்தாலியில் கொரோனா வைரஸ் பீதி: 7 ஆயிரம் பேருடன் வந்த கப்பல் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 31 Jan 2020 11:14 PM GMT (Updated: 31 Jan 2020 11:14 PM GMT)

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இத்தாலியில் 7 ஆயிரம் பேருடன் வந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ரோம்,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி விட்டது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அங்குள்ள அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. அதுமட்டும் இன்றி பிற நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குள் நுழையா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே உள்ள சிவிடவேச்சியா துறைமுகத்துக்கு கோஸ்டா ஸ்மரால்டா என்ற சொகுசு கப்பல் வந்தது. இந்த கப்பலில் 6 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், ஆயிரம் ஊழியர்களும் இருக்கின்றனர்.

கப்பலில் பயணம் செய்யும் சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மக்காவுவை சேர்ந்த 54 வயதான பெண் ஒருவருக்கு, காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் இத்தாலி அதிகாரிகள் கோஸ்டா ஸ்மரால்டா சொகுசு கப்பலை சிவிடவேச்சியா துறைமுகத்துக்குள் அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கணவருக்கு எந்தவித நோய் பாதிப்பும் இல்லாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளார்.

கப்பலில் இருக்கும் மருத்துவ குழு, சீன பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதோடு, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் சீன தம்பதியின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ரோம் நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில், அது கப்பலில் இருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஏற்கனவே பரவியிருக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே சீன பெண்ணின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை மற்ற பயணிகள் அனைவரும் கப்பலிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் கப்பலில் இருக்கும் 7 ஆயிரம் பேர் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

கப்பலில் இருக்கும் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கேபி என்ற பெண் பயணி டுவிட்டரில், “இத்தாலி அதிகாரிகள் எங்களை ரோம் நகருக்குள் அனுமதிக்கவில்லை. நாங்கள் கவலைப்படுகிறோம். எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரியாது” என தெரிவித்துள்ளார்.

அதே போல் இத்தாலியை சேர்ந்த ரோஷி என்ற பயணி “அதிகாரப்பூர்வமாக எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படாத சூழலில் நாங்கள் கப்பலில் சிக்கியிருக்கிறோம். பெரும் பாலான பயணிகள் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்கள். நாங்கள் கப்பலில் இருந்து எப்போது வெளியே வருவோம் என்பது எங்களுக்கு தெரியவில்லை” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story