சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிக பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு


சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிக பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 26 Feb 2020 4:31 PM GMT (Updated: 26 Feb 2020 4:31 PM GMT)

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஜெனீவா,

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  உகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்து உள்ளது.  78 ஆயிரத்து 190 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

இதேபோன்று 37 நாடுகளில் 44 பேர் உயிரிழந்து உள்ளனர்.  2,790 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியீசஸ் ஜெனீவா நகரில் இன்று கூறும்பொழுது, சீனாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளை விட சீனாவுக்கு வெளியே பிற நாடுகளில் கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று முதன்முறையாக அதிகரித்து இருந்தது என கூறியுள்ளார். 

ஐ.நா. சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் நேற்று 411 புதிய பாதிப்புகளும், சீனாவுக்கு வெளியே 427 புதிய பாதிப்புகளும் இருந்தன என தெரிவித்திருந்தது.  ஈரான், இத்தாலி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்புகள் உயர்ந்த நிலையில், உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்கள் கொரோனாவைரசை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Next Story