கொரோனா வைரசுடன் உலகமே போரில் ஈடுபட்டுள்ளது - டிரம்ப் கருத்து


கொரோனா வைரசுடன் உலகமே போரில் ஈடுபட்டுள்ளது - டிரம்ப் கருத்து
x
தினத்தந்தி 18 March 2020 11:42 PM GMT (Updated: 18 March 2020 11:42 PM GMT)

கொரோனா வைரசுடன் உலகமே போரில் ஈடுபட்டுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 100 பேர் பலியானநிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். நாம் மட்டுமின்றி, உலகமே போரில் ஈடுபட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாததாக இருந்தாலும், உலகமே தெரிந்து கொண்ட ஒன்றாகி விட்டது. நிச்சயமாக அந்த எதிரியை வீழ்த்துவோம். அதற்காக எல்லா வளங்களையும் பயன்படுத்துவோம்.

இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்ட பிறகு, வழக்கமான பணிகளுக்கு விரைவில் திரும்பலாம். அதுவரை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். உலகத்தில், பாதிப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை நிச்சயம் இடம் பெறச் செய்வேன். இந்த போரில் நாம் வெற்றிபெற காலதாமதம் ஆவது நல்லது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

கலிபோர்னியா மாகாணத்தில் பெரும்பாலான பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அம்மாகாண கவர்னர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஹுபேய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரசின் வீரியம் குறைந்து வருகிறது. தொடர்ந்து, 2-வது நாளாக ஒருவருக்கு மட்டுமே கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில், சீனா முழுவதும் 11 பேர் பலியானதால், சாவு எண்ணிக்கை 3 ஆயிரத்து 237 ஆக உயர்ந்தது.

ஆஸ்திரேய மக்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார். உள்நாட்டிலும் நூறு பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதித்துள்ளார். முதல் உலகப்போருக்கு பிறகு இத்தகைய நிகழ்வை பார்த்தது இல்லை என்று அவர் தெரிவித்தார்.

பிற நாடுகளைப் போல், பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்காட் மாரிசன் நிராகரித்தார். பள்ளிகளை மூடுவதால், சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய கூட்டமைப்பு, தனது எல்லைகளை மூட முடிவு செய்துள்ளது. மக்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர் உர்சுலா வான் டெர் லியன் கூறியுள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், இங்கிலாந்து, போர்க்கால அரசாங்கம் போல் செயல்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.

தேவையற்ற தொடர்புகளையும், பயணங்களையும் தவிர்க்குமாறு போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலை நாடுகளைப் போல், மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நடவடிக்கையை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார். அவர் கூறியதாவது:-

அமெரிக்கா, ஐரோப்பா போன்றது அல்ல, பாகிஸ்தான். 25 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். நகரங்களை முடக்கினால், மக்கள் கொரோனா வைரசில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், மறுபக்கம், அவர்கள் பட்டினியால் மடிவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது. இத்தாலி, ஈரான், தென்கொரியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் வர தென்ஆப்பிரிக்கா நேற்று தடை விதித்தது.

பெல்ஜியம் நாட்டில் 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகி உள்ளனர்.

அங்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று பிரதமர் சோபி வில்ம்ஸ் அறிவுறுத்தி உள்ளார். மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே வெளியே செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story