‘கைகளை தொடாமல் பணம் செலுத்துங்கள்’ - வாடிக்கையாளர்களுக்கு ‘சூப்பர் மார்க்கெட்’ கட்டுப்பாடு


‘கைகளை தொடாமல் பணம் செலுத்துங்கள்’ - வாடிக்கையாளர்களுக்கு ‘சூப்பர் மார்க்கெட்’ கட்டுப்பாடு
x
தினத்தந்தி 20 March 2020 10:54 PM GMT (Updated: 20 March 2020 10:54 PM GMT)

ஆஸ்திரேலியாவில், ‘கைகளை தொடாமல் பணம் செலுத்துங்கள்’ என்று வாடிக்கையாளர்களுக்கு ‘சூப்பர் மார்க்கெட்’ கட்டுப்பாடு விதித்துள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் செயல்படும் பிரபல ‘உல்வொர்த்ஸ்’ பல்பொருள் அங்காடி(சூப்பர் மார்க்கெட்) கொரோனா வைரஸ் அச்சுறுத்துதலால் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கடைக்குள் நுழைவதற்கு முன், வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும், பொருட்களை வாங்குவதற்கு ஒவ்வொருவரும் ஒரு டிராலியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். 1.5 மீட்டர் இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் நிற்க வேண்டும்.

மேலும் பொருட்களுக்கான பணத்தை ஊழியர்களிடம் நேரடியாக செலுத்தாமல், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஸ்கேனரில் காண்பித்து அல்லது டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். அதாவது யாருடைய கைகளையும் தொடாமல் பணம் செலுத்துமாறு அந்த அங்காடி வாடிக்கையாளர்களை கேட்டு கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதனை வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அங்காடியில் ஒருவர், ஒரு நாளைக்கு 2 பாட்டில்கள் பால் மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story