உலக அளவில் கொரோனா சீற்றம் ; அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிர்ப்பலி அதிகரிப்பு


உலக அளவில் கொரோனா சீற்றம் ; அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிர்ப்பலி அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 March 2020 3:45 AM GMT (Updated: 25 March 2020 3:58 AM GMT)

உலக அளவில் கொரோனா சீற்றம் அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.

வாஷிங்டன்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. 422,566 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  108,388-பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.  இத்தாலியில், புதிதாக 5249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இத்தாலியில்  ஒரே நாளில் 743 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  6,820 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி  அங்குப் புதிதாக 11 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் 200-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் 775 பேர்  கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

சீனாவில் வைரஸின் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக சீனா அறிவித்திருக்கும் அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புதிதாக தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

அமெரிக்காவில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, திங்கட்கிழமை முடிவில் 43,700 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 550ஐ தாண்டியது.

நியூயோர்க்கில் ஆயிரம் பேரில் ஒருவர் என்ற விகிதத்தில்  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் வைரஸ் நெருக்கடி ஒருங்கிணைப்பாளரான டிபோரா எல். பிரிக்ஸ் கூறி உள்ளார்.

மருத்துவமனையின் படுக்கைகள் எண்ணிக்கையை  50 சதவீதமாக அதிகரிக்குமாறு நியூயார்க் ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றான நியூயார்க் இப்போது மூடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளான முகக்கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றை பதுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து பேசிய டிரம்ப், முக்கிய மருந்துகள், பாதுகாப்பு கருவிகளை கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

2020 ஒலிம்பிக் பற்றிய தீர்மானம் எந்த நேரத்திலும் எடுக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவும்,கனடாவும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து ஏற்கனவே விலகி விட்டன.சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் திங்களன்று மரணங்களும் சற்று குறைந்து காணப்பட்டது.

வைரஸ் பரவலை அடுத்து உலகம் பூராவும் பெரும் குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் உலகின் சகல மூலைகளிலும் போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர்  அந்தோனியா குட்டரஸ் ஆயுத மோதல்களை முடக்கிவிட்டு கொரோனா வைரஸ் பரவல் மீது கூட்டாக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.


Next Story