அமெரிக்காவில் மக்கள் சோகம்; ஒரே நாளில் 2,129 பேர் கொரோனாவுக்கு பலி


அமெரிக்காவில் மக்கள் சோகம்; ஒரே நாளில் 2,129 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 15 April 2020 9:45 PM GMT (Updated: 15 April 2020 9:16 PM GMT)

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 2,129 பேர் பலியாகினர். இது அந்த நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் தாக்கம் சற்றே குறைந்தது. தினமும் 2 ஆயிரம் பேர் அளவுக்கு இறந்து வந்தனர். அது 1,300 என்கிற அளவுக்கு குறைந்து வந்தது. இந்த நிலையில் அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கி விட்டதோ என்று சந்தேகிக்கிற நிலை உருவாகி உள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு 2,129 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலில், பரிதாபமாக உயிரிழந்தனர். இது அமெரிக்க மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும், 25 ஆயிரத்தை கடந்து 25 ஆயிரத்து 981 ஆக இருக்கிறது.

இதற்கு முன்பு கடந்த 10-ந் தேதி 2,074 பேர் இறந்தது தான், ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பலியாக இருந்தது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நியூயார்க் நகரம்தான் கொரோனா தொற்று நோயின் மையப்புள்ளியாக திகழ்கிறது.

அந்த நகரத்தில் இந்த வைரஸ் நோய் தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை, 2 லட்சத்து 3 ஆயிரத்து 20 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை அங்கு 10 ஆயிரத்து 842 என்ற அளவை எட்டி உள்ளது. இதற்கு மத்தியில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அந்த நாட்டு அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அமெரிக்கா தொடர்ந்து முன்னேறி செல்கிறது. கண்ணுக்குத் தெரியாத எதிரியால் விலை மதிக்க முடியாத ஒவ்வொரு உயிர் போகிறபோதும் மிகுந்த துயரம் அடைகிறோம். இந்த இருளின் மத்தியிலும் ஒளியின் கீற்று தெரிகிறது” என்று உருக்கமுடன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

நாம் சுரங்கப்பாதையை காண்கிறோம். அதன் முடிவில் வெளிச்சம் தெரிகிறது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இப்போது வெளிச்சத்தை பார்க்கிறோம். கொரோனா வைரசுக்கு எதிரான நமது கட்டுப்பாடுகள் கடுமையானவை, வலிமையானவை.

உலகின் பிற எந்த நாட்டையும் விட தீவிர சிகிச்சைப் பிரிவில் இங்கு அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 34.7 என்ற அளவில் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கை வசதி உள்ளது. இது இத்தாலியில் 12.5, பிரான்சில் 11.6, ஸ்பெயினில் 9.7 என்ற அளவுக்கே உள்ளது.

இங்குள்ள ஆஸ்பத்திரிகளில் 16 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் இருக்கின்றன. உமிழ்நீரை பயன்படுத்தி கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை அமெரிக்காவில்தான் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கி உள்ளனர்.

இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், தனது அனுமதியை அளித்துள்ளது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் இந்த பரிசோதனையை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story