சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு


சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 April 2020 5:25 AM GMT (Updated: 16 April 2020 5:25 AM GMT)

சீனாவின் உகான் நகரம் கொரோனா பிடியில் இருந்து மெதுவாக மீண்ட நிலையில், வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,சமீபத்தில் கொரோனோ பாதிப்புக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,500 என அதிகரித்துள்ளது.

ஆனால் ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருகிற நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சீன – ரஷ்ய எல்லையில் அமைந்திருக்கும் சூஃபென்ஹே பகுதியில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில் அந்த நகரம் மற்றொரு உகானாக மாறி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் முதல் முறையாக கடந்த நவம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.தற்போது சீனா கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டுவிட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சீனர்களிடம் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மிகக் குறிப்பாக சீன- ரஷ்ய எல்லைப் பகுதிகளில் கொரோனோ தொற்று ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 10 பேரைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய சீனர்கள் என்றும் சீனாவின் தேசிய சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர, கொரோனா அறிகுறி வெளிப்படாத ஆனால் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியிருக்கிற 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை 1,023 ஆக உயர்ந்துள்ளது.இதுவரையில் சீனாவில் மொத்தமாக 82,295 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 3,342 பேர் பலியாகியுள்ளனர். 77,816 பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story