அமெரிக்காவில் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊரடங்கு தளர்வு : மாநில ஆளுநர்கள் அதிருப்தி


அமெரிக்காவில் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊரடங்கு தளர்வு : மாநில ஆளுநர்கள் அதிருப்தி
x
தினத்தந்தி 17 April 2020 1:07 PM GMT (Updated: 17 April 2020 1:07 PM GMT)

கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊரடங்கு தளர்வு திட்டத்திற்கு மாநில ஆளநர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர் .

வாஷிங்டன்

கொரோனா பாதிப்பால் அமெரிக்கா உலகிலேயே அதிக உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் கோடிக்கணக்கான பேர் வேலை இழந்து உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முனைப்புக்காட்டி வருகிறார்.

இந்நிலையில், வரும் மாதங்களில் பொருளாதாரங்களை மீட்டெடுப்பது குறித்தும், மூன்று கட்டங்களாக ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் மாநில ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்.

மாநிலங்கள் படிப்படியாக ஊரடங்கை தளர்த்திக்கொள்ளலாம் என்றும், மத்திய அரசின் உதவியுடன் அந்தந்த மாநில ஆளுநர்களே இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

அதன்படி அவர், நேற்று 3  கட்ட செயல்திட்டத்தை அறிவித்தார். இது குறித்து பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:-

நம்முடைய அடுத்த போர் என்பது, அமெரிக்காவை மீண்டும் பொருளாதாரத்தை சிறந்த பாதையில் கொண்டு செல்வதுதான். அமெரிக்கா முழுவதும் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அமெரிக்க மக்களும் அதையே விரும்புகிறார்கள்.

நீண்டகாலம் ஊரடங்கு வைத்திருந்தால் மாகாணங்களில் எந்த பயனும் ஏற்படாது. ஊரடங்கால் மக்களில் உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. குடும்ப வன்முறைகள், போதைப் பழக்கங்கள் தான் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் அமெரிக்கர்கள் துணிச்சலாக வெளியே வந்து வேலைக்கு செல்லலாம். அதே சமயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆளுநர்களும் ஊரடங்கு தளர்த்துவது குறித்து வேகமாக முடிவெடுக்க வேண்டும். மூன்று கட்ட திட்டங்கள் மூலம் அமெரிக்க பொருளாதாரம் மீ்ண்டும் இயல்பு பாதைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளேன். 

இந்த 3 கட்டங்களிலும் மக்கள் அதிகமாக சுத்தம், சமூக விலகல் சோதனை செய்தல் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்தல் அவசியம் ஆகும் என கூறினார்.

ஆனால் பெரும்பாலான மாநில அளூநர்கள் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில் இவ்வாறு டிரம்ப் திட்டமிடுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளதோடு. அதிகமான பரிசோதனைகள் இன்னும் தேவை என்றும் தெரிவித்துள்ளனர்.

Next Story