நேபாளத்துக்கு 23 டன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் - இந்தியா பரிசாக வழங்கியது


நேபாளத்துக்கு 23 டன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் - இந்தியா பரிசாக வழங்கியது
x
தினத்தந்தி 22 April 2020 9:15 PM GMT (Updated: 22 April 2020 8:40 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராட நேபாள நாட்டுக்கு இந்தியா 23 டன் அத்தியாவசிய மருந்து பொருட்களை பரிசாக வழங்கியது.

காட்மாண்டு,

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக உலகளாவிய போர் நடந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், இந்த வைரஸ் எதிர்ப்பு போரில் சார்க் என்று அழைக்கப்படுகிற தெற்காசிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கடந்த மாதம் காணொலி காட்சி வழியாக ஏற்கனவே கலந்துரையாடினார். தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தைக்கூட கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அங்கு 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேபாள நாட்டுக்கு உதவுகிற வகையில், 23 டன் அத்தியாவசிய மருந்து பொருட்களை பரிசாக இந்தியா வழங்கி உள்ளது. இதில் 8.25 லட்சம் அத்தியாவசிய மருந்துகள், 3.2 லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகள், 2.5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் அடங்கும்.

இந்தியாவின் இந்த பரிசை காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா, அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி பானுபக்த தக்காலிடம் நேற்று நேரில் வழங்கினார்.

இதையொட்டி காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “எல்லா சூழ்நிலைகளிலும் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே தொடருகிற ஒத்துழைப்பை இந்தியா அளித்துள்ள 23 டன் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் பரிசு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் இந்தியா மற்றும் நேபாள சுகாதார அதிகாரிகள் ஒத்துழைத்து வருகின்றனர். இந்த சவாலான நேரத்தில் நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

இந்தியா அளித்துள்ள பரிசுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒளி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராட நேபாளத்துக்கு தேவையான 23 டன் அத்தியாவசிய மருந்து பொருட்களை தாராள மனதுடன் இந்தியா வழங்கி உள்ளது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

நேபாளத்தில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்தது. அவர்களில் 7 பேர் குணம் அடைந்துள்ளனர். 38 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

Next Story