கொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு


கொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு
x
தினத்தந்தி 23 April 2020 12:42 AM GMT (Updated: 23 April 2020 12:42 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உண்மையை மறைத்ததாகவும், உலகளவில் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துவிட்டதாகவும் சீனா மீது அமெரிக்கா வழக்கு போட்டுள்ளது.

வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது.

25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் நோய் பரவலை தடுப்பதற்காக உலகின் பல நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து, மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளன.

எந்த பொருளாதார நடவடிக்கைகளும் நடைபெறாததால் உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.

இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் மிசவுரி மாகாணம் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் முதலில் வழக்கு போட்ட மாகாணம் என்ற பெயரை இதன்மூலம் மிசவுரி மாகாணம் பெற்றுள்ளது.

மிசவுரியின் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கை அட்டார்னி ஜெனரல் எரிக் சுமிட் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் தோன்றி பரவிய ஆரம்ப வாரங்களில் சீன அதிகாரிகள், பொதுமக்களை ஏமாற்றி அடக்கி வைத்தனர்.

* கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவல்களை சீன அரசு மறைத்து விட்டது. இந்த நோய் பற்றி எச்சரிக்கை விடுத்தவர்களை சீன அரசு கைது செய்தது. இதற்கெல்லாம் சீன அரசை பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

* மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவக்கூடியது என்பதை முதலில் சீனா மறுத்து விட்டது. ஆதாரங்கள் இருந்தும் கூட இந்த தொற்றுநோய் குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் டிசம்பர் 31-ந் தேதி வரை சீன அதிகாரிகள் புகார் செய்யவில்லை. கொரோனா வைரஸ் நோய் பற்றி தெரிந்திருந்தும் கூட அதன் பரவலைத் தடுக்க சீன அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* உலகம் எங்கும் உள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தொற்றுநோய், மரணம், பொருளாதார சீர்குலைவு என பற்பல துன்பங்கள் நேரிட்டுள்ளன.

* மிசவுரி மாகாணம், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஆயிரக்கணக்கானோரை இந்த வைரஸ் நோய் தாக்கி உள்ளது. பலர் இறந்து விட்டனர்.

* நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சேகரித்துள்ள தரவுப்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், உகான் நகரில் இருந்து சீன சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்கு 1¾ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அந்த நேரத்தில் அரசும் புத்தாண்டு கொண்டாட்டங்களில்தான் கவனத்தை செலுத்தியது.

* சீன அதிபர் ஜின்பிங், டாக்டர்களின் வாய்களை அடைத்து விட்டார். முக்கியமான விஞ்ஞான தகவல்களை மறைத்து விட்டார். பிப்ரவரி நகுப்பகுதி வரையில் சுகாதார அதிகாரிகளை அணுக மறுத்து விட்டார்.

* கொரோனா வைரஸ் தொடர்பான பயனற்ற உபகரணங்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி உள்ளனர்.

* தங்கள் கைகளில் உள்ளது கொடிய வைரஸ் என்று நன்றாக அறிந்திருந்தபோதும், ஜனவரி மத்தியில் உலக சுகாதார நிறுவனத்திடம் கொரோனா வைரஸ் விவகாரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையில்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏராளமான அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஏராளமானோரின் தொழில்கள் முடங்கி உள்ளன. இதற்கெல்லாம் காரணம் சீன அரசின் பொய்கள்தான். தாங்கள் இழந்ததை சீன அரசிடம் இருந்து பெறுவதற்கு அமெரிக்கர்களுக்கு உரிமை உண்டு. இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சீன அரசும், சீன கம்யூனிஸ்டு கட்சியும், சீன அரசு அதிகாரிகளும், சீன அமைப்புகளும் எதிர் வழக்குதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீன அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு மாகாணங்களும் வழக்கு தொடரும் நெருக்கடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story