அமெரிக்காவில் சுய பாதுகாப்பு கருவிகள் பதுக்கி அநியாய விலைக்கு விற்பனை - இந்தியர் மீது வழக்கு


அமெரிக்காவில் சுய பாதுகாப்பு கருவிகள் பதுக்கி அநியாய விலைக்கு விற்பனை - இந்தியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 April 2020 9:14 PM GMT (Updated: 25 April 2020 9:14 PM GMT)

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான சுய பாதுகாப்பு கருவிகளை பதுக்கி வைத்து ஆன்லைனில் அநியாய விலைக்கு விற்பனை செய்த இந்திய வம்சாவளி சிக்கினார். அவர்மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி உள்ளது.

நியூயார்க், 

அமெரிக்க வல்லரசு நாடு, இப்போது கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த தொற்று நோய்க்கு 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி உள்ளனர்.

அங்கு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான முக கவசங்கள், சுய பாதுகாப்பு கருவிகள், அனைவருக்குமான சானிடைசர் திரவம், நோயாளிகளுக்கான செயற்கை சுவாச கருவிகள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலக நாடுகள் இவற்றை நன்கொடையாக அளிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இவற்றையெல்லாம் பெரிய அளவில் பதுக்கி வைத்து, ஆன்லைனில் அநியாய விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வந்துள்ளார்.

அவர் இப்போது வசமாக மாட்டிக்கொண்டு விட்டார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளியான அமர்தீப் சிங் (வயது 45).

இவர்தான் கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் முன்வரிசையில் நின்று போராடி வருகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கான சுய பாதுகாப்பு கருவிகளையும் (பிபிஇ), இன்னும் பல மருத்துவ பொருட்களையும், உயிர்காக்கும் சிகிச்சையில் அத்தியாவசியமாக தேவைப்படும் செயற்கை சுவாச கருவிகளையும் நியூயார்க் நகரில் பிரெண்ட்வுட் பகுதியில் அமைந்துள்ள குடோனில் டன் கணக்கில் பதுக்கி வைத்தார்.

அவற்றை அவர் பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும், நாசாவ் கவுண்டி ஸ்டோர்களிலும் அநியாய விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இது அரசின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர் சிக்கினார்.

அமர்தீப் சிங் மீது சென்டிரல் இஸ்லிப் பகுதியில் அமைந்துள்ள மத்திய கோர்ட்டில் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை புரூக்ளின் அரசு வக்கீல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமர்தீப் சிங், பாதுகாப்பு உற்பத்தி சட்டம் 1950-ஐ மீறி, அத்தியாவசிய மருத்துவ கருவிகளை பதுக்கி அநியாய விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு கோர்ட்டில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையை பெற்றுத்தரும். அடுத்த வாரம் அவர் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமர்தீப் சிங் பதுக்கி வைத்திருந்த அனைத்தும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story