அமெரிக்காவில் போர்வீரர்களை போல செயல்படும் இந்திய டாக்டர்கள்


அமெரிக்காவில் போர்வீரர்களை போல செயல்படும் இந்திய டாக்டர்கள்
x
தினத்தந்தி 28 April 2020 1:58 AM GMT (Updated: 28 April 2020 1:58 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக போர்வீரர்களை போல இந்திய டாக்டர்கள் செயல்படுகின்றனர்.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் தனது ராஜபாட்டையை வலிமையாய் நடத்தி வருவது அமெரிக்காவில்தான். அதனால்தான் உலகத்துக்கே பெரிய அண்ணன் என்று தன்னை காட்டிக்கொண்டு வந்த அமெரிக்க வல்லரசு, ஒவ்வொரு நாளும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது.

உலகின் எத்தனையோ நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து வென்றதெல்லாம் பழங்கதை.  அந்த நாடு, இப்போது கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை வீழ்த்தி ஜெயிக்க முடியுமா என்பதுதான் இப்போது அமெரிக்காவில் எதிரொலித்துக்கொண்டிருக்கிற டிரில்லியன் டாலர் கேள்வி.

முடியும் என்ற பதிலை சொல்லக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் யார் தெரியுமா?  நம்மவர்கள். நமது இந்தியர்களும், இந்திய வம்சவாளியினரும். அதெப்படி என்கிறீர்களா?  அங்கே உள்ள டாக்டர்களில் ஒவ்வொரு ஏழாவது டாக்டரும் நம்மவர்தான்.  இதை அழுத்தம் திருத்தமாக சொல்வது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் சுரேஷ் ரெட்டி.

அமெரிக்கா இதுவரை பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இப்போது அந்த நாடு எதில் எல்லாம் முதலிடம் தெரியுமா?

உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில்...  உலகளவில் அதிகம் பேரை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பலி கொண்டதில்...  உலகளவில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில்.... இதுதான் இப்போது அமெரிக்காவின் நிலை.

இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்றுதான் அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலை வரவேண்டுமானால் அதில் நம்மவர்கள் பங்களிப்புதான் முக்கியம். முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயின் உடும்புப்பிடியில் இருந்து அமெரிக்கா மீண்டு வர வேண்டுமானால் அதில் நம்மவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது.

அமெரிக்க நாட்டில் உள்ள பல முன்னணி ஆஸ்பத்திரிகளிலும் நம்மவர்கள்தான் முன்னணி டாக்டர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் துணிச்சலுடன் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முன் வரிசையில் ஆக்ரோஷமாக நின்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றி இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் சுரேஷ் ரெட்டி அளித்த சிறப்பு பேட்டியில், அமெரிக்காவில் ஒவ்வொரு 7வது டாக்டரும் ஓர் இந்தியர்தான். அவர்கள்தான் கொரோனா வைரசை எதிர்த்து போர் வீரர்களைப்போல வீரமுடன் செயல்பட்டு வருகிறார்கள். ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயமும் இப்போது கொரோனா வைரசை எதிர்த்துதான் போரிட்டு வருகிறது. இந்த போர், மிக நீண்டதொரு போராகத்தான் இருக்கப்போகிறது. இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போர் ஒன்றிரண்டு மாதங்களில் முடிந்து விடுகிற போர் கிடையாது.

இந்த போர் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு சந்தைக்கு வரும்வரையில் இது தொடரலாம். தடுப்பூசி மட்டும்தான் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாக அமையும்.

ஊரடங்கு, கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்கள் கவலைப்படுகிறார்கள். சோர்வு அடைகிறார்கள்.  அதே நேரத்தில் ஊரடங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் திறக்கிறபோது மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு படியாக எடுத்து வைக்க வேண்டும். இது மெதுவாக நடத்த வேண்டிய நடவடிக்கை.

வர்த்தக நடவடிக்கை என்ற கதவை நினைத்த உடனே திறந்து விடவும் முடியாது. மூடி விடவும் இயலாது. நாம் அதை மிகவும் கவனமுடன் திட்டமிட்டு செயல்படுத்தாவிட்டால், ‘இதோ மறுபடியும் வந்து விட்டேன்’ என்று கொரோனா வைரஸ் மீண்டும் தாக்குவதற்கு வரும். அப்போது பாதிப்புகள் இன்னும் மோசமாகும்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அதை தோற்கடிப்பதற்கு நாம் 3 முனை தாக்குதல் தொடுக்க வேண்டியதிருக்கிறது.  இதில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் எடுக்க வேண்டும்.  அத்தியாவசியமான, உயிர் காக்கிற சிகிச்சையை மருத்துவ சமுதாயம் மேற்கொள்ள வேண்டும்.  சுகாதார ஒழுங்கினை மக்கள் கடைப்பிடித்தாக வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை இப்போது பரப்புவதும், கட்டுப்படுத்துவதும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் விதிமுறைகளை, கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்றுகிறவரையில் இந்த வைரசை கட்டுப்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் என்ற ராட்சதனை கொன்றுதான் ஒரு மகத்தான தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்.  ஒரு கட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறபோதும்கூட வாழ்க்கை, இந்த தொற்றுநோய் வருவதற்கு முன் இருந்ததை போல எளிதாக அமைந்து விடாது.

விஷயங்கள் எல்லாமே இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று நான் கருதவில்லை.  நாம் கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவத்தான் வேண்டும். பொது இடங்களுக்கு கண்டிப்பாக முக கவசம் அணிந்துதான் நாம் செல்ல வேண்டும். இதுதான் புதியதோர் எதிர்காலம். இதுதான் புதிய இயல்பான வாழ்க்கை என்றாகிவிடும்.

இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி ஊரடங்கு, முக கவசம் அணிதல் ஆகிய இரண்டும்தான் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்க நாட்டுக்கு ஒரு பாடத்தை கற்றுத்தந்திருக்கிறது. இனி தனது மருத்துவ சாதனங்களை, மருந்துப்பொருட்களை சீனாவை சார்ந்திருக்காமல், தானே உற்பத்தி செய்ய தொடங்கி விட வேண்டும் என்பதுதான் அந்த பாடம்.

உற்பத்தி செய்கிற நிறுவனங்கள் அமெரிக்க நாட்டில் இருந்திருந்தால், முக கவசங்களாக இருக்கட்டும், சுய பாதுகாப்பு கருவிகளாக இருக்கட்டும், இப்போதுள்ள தட்டுப்பாடு வந்திருக்காது. முக கவசம் வேண்டுமா? சுய பாதுகாப்பு கருவிகள் வேண்டுமா? செயற்கை சுவாச கருவிகள் வேண்டுமா? ஓடு, சீனாவுக்கு என்பதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது.

அதே நேரத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன் வரிசையில் இருந்து துணிச்சலுடன் களப்பணி ஆற்றுகிற நமது இந்திய டாக்டர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களை எண்ணி நாம் பெருமைப்படலாம். நமது இந்திய மருத்துவ சமூகத்தை அமெரிக்க அரசு அதிகாரிகள் பாராட்டுகிறார்கள். நாம்தான் பலம் வாய்ந்த மருத்துவ சமூகம் என்பதை ஒவ்வொரு அமெரிக்கரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். நமது பங்களிப்பு மகோன்னதமாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்துவுடன் நாங்கள் நெருங்கி பணியாற்றுகிறோம். இந்தியர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் இந்திய தூதரகம் உடனே உதவிக்கரம் நீட்டுகிறது.

இப்படி சொல்லிக்கொண்டே போகிறார் டாக்டர் சுரேஷ் ரெட்டி.  அமெரிக்காவிலும் சாதிப்பது இந்தியர்கள் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் தலை நிமிர்ந்து நிற்கலாம்!

Next Story