அமெரிக்காவில் மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை


அமெரிக்காவில் மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை
x
தினத்தந்தி 26 May 2020 11:45 PM GMT (Updated: 26 May 2020 9:18 PM GMT)

அமெரிக்காவில் மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை படைத்துள்ளது. இது கொரோனா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்து வருகிறது.

ஏறத்தாழ 56 லட்சம் பேரை உலகமெங்கும் இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை எடுத்தும் பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 3½ லட்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குகிறபோது நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் பாதிக்கப்படுகிறபோது, சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறது. சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறபோது மரணம் நேருவதற்கான ஆபத்து கண் எதிரே இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசக்கருவி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கருவியானது நுரையீரலுக்கு சுவாச காற்றை செலுத்துகிறது, வெளியேற்றுகிறது. எனவே உடல்ரீதியாக இயற்கையாக சுவாசிக்க முடியாத நோயாளிகளுக்கு செயற்கையாக சுவாச காற்றோட்டத்தை வழங்க இந்த வெண்டிலேட்டர் உதவுகிறது.

இந்த வெண்டிலேட்டரின் விலை அதிகம். அமெரிக்காவில் 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.7½ லட்சம்) என்கிறார்கள். தவிரவும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் தேவையை சமாளிக்கக்கூடிய அளவுக்கு நினைத்த உடனேயே தேவையான எண்ணிக்கையில் எளிதாக தயாரித்து விடவும் இயலாது. இதற்கு உலகமெங்கும் பற்றாக்குறைதான் நிலவி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாங்கள் வெண்டிலேட்டர்களை நன்கொடையாக தருவோம் என்று சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் அதே அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதியர் மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கி அசாத்திய சாதனையை ஓசைப்படாமல் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இந்த தம்பதியர் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், குமுதா ரஞ்சன் தம்பதியர் ஆவர்.

தேவேஷ் ரஞ்சன், ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜார்ஜ் உட்ரப் மெகானிக்கல் என்ஜினீரியங் கல்லூரியின் பேராசிரியர். அவரது மனைவியான குமுதா ரஞ்சன், அட்லாண்டா நகரில் டாக்டராக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்துதான் 3 வார காலத்தில் மலிவுவிலை வெண்டிலேட்டரை உருவாக்கி இருக்கிறார்கள். 100 டாலருக்கும் குறைவான (சுமார் ரூ.75 ஆயிரம்) விலையில் இந்த வெண்டிலேட்டரை உருவாக்கி விட முடியும் என்கிறார்கள். 500 டாலர் விலைக்கு விற்றால்கூட (சுமார் ரூ.37,500) தயாரிப்பு நிறுவனம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலுமாம்.

தங்கள் சாதனை பற்றி பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன் இப்படி சொல்கிறார்...

“நுரையீரல் செயல் இழக்கிறபோது வெண்டிலேட்டர் உடலின் சுவாச செயல்முறையை எடுத்துக்கொள்கிறது. இது நோயாளிகள் தொற்றுநோயை எதிர்த்து போராடி மீட்க அவகாசம் தருகிறது. நாங்கள் தயாரித்து இருப்பது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வெண்டிலேட்டர் அல்ல. இது மிகவும் சிக்கலானது. அதிக செலவு ஆகும். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குரிய பொதுவான சிக்கலான கடுமையான சுவாசக்குழாய் நோய்க்குறியை நிவர்த்தி செய்வதற்கு இந்த திறந்த காற்றோட்ட வெண்டிலேட்டர் உதவியாக இருக்கும். கொரோனா நோயாளிகளின் விறைத்துப்போன நுரையீரல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் காண்பதற்கு இந்த வெண்டிலேட்டர் உதவும்” என்கிறார் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன்.

அவரது மனைவி டாக்டர் குமுதா ரஞ்சன் இதுபற்றி கூறும்போது, “இந்த மலிவு விலை வெண்டிலேட்டரை ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கி உள்ளோம். இதில் சுவாச வீதம், அலை அளவு (ஒவ்வொரு சுழற்சியிலும் காற்று நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வது) உத்வேகம், நுரையீரல் அழுத்தம் ஆகியவற்றை மின்னணு சென்சார்கள் மற்றும் கணினி கட்டுப்பாடும் கவனித்துக்கொள்ளும். இந்த திட்டத்தின் முழு குறிக்கோளும், மலிவு விலை தற்காலிக வெண்டிலேட்டரை உருவாக்குவதுதான்” என்று சொல்கிறார்.

பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. என்னும் பிராந்திய பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதன்பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றார். ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார்.

டாக்டர் குமுதா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். 6 வயதாக இருந்தபோதே தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியவர். மருத்துவ படிப்பை நியுஜெர்சியில் முடித்தார்.

தங்களது கண்டுபிடிப்பு பற்றி பேராசிரியர் தேவேஷ் ரஞ்சனும், டாக்டர் குமுதாவும் சேர்ந்து சொல்லும்போது, “இந்தியா, உலகளவிலான மலிவு விலை வெண்டிலேட்டர்களை உருவாக்கி, உலகமெங்கும் ஏற்றுமதி செய்வதற்கான வளத்தை கொண்டுள்ளது. இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தேவையை கருத்தில் கொண்டுதான் இந்த வெண்டிலேட்டரை மலிவு விலை வெண்டிலேட்டராக உருவாக்கி உள்ளோம். இந்தியாவில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை பயன்படுத்தியே இந்த வெண்டிலேட்டரை எளிதாக தயாரிக்க முடியும்” என்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடான கானா மற்றும் இந்தியாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் உற்பத்தி பிரிவுகளை தொடங்குவதற்காக எங்களை நாடி உள்ளனர் என்றும் சொல்கிறார் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன்.

இந்த வெண்டிலேட்டரை பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்கி விட்டால் உலகளவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


Next Story