“சீன எல்லை பிரச்சினை பற்றி மோடியுடன் பேசினேன்” - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேட்டி


“சீன எல்லை பிரச்சினை பற்றி மோடியுடன் பேசினேன்” - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேட்டி
x
தினத்தந்தி 29 May 2020 11:30 PM GMT (Updated: 30 May 2020 12:23 AM GMT)

சீன எல்லை பிரச்சினை பற்றி மோடியுடன் பேசியதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

பிரதமர் மோடியுடன் தான் பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், இந்தியாவும் அங்கு தனது படை பலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ‘டுவிட்டர்‘ பதிவு ஒன்றை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினையில் சமரசம் செய்து வைக்க தயார் என்று தயார் என்று கூறி இருந்தார்.

இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று முன்தினம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், “பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்“ என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நாசூக்காக நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில், டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இரு நாடுகளும் தலா 140 கோடியே 40 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடுகள். இரு நாடுகளிடமும் சக்திவாய்ந்த ராணுவம் உள்ளது. எல்லை பிரச்சினையில் இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, இதேபோல் சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை.

இந்தியாவில் என்னை நேசிக்கிறார்கள். நான் பிரதமர் மோடியை மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு ‘ஜென்டில்மேன்‘. நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். சீனாவுடன் பிரச்சினை இருந்து வருவதால் அவர் நல்ல மனநிலையில் இல்லை.

இப்போதும் கூறுகிறேன். அமெரிக்காவிடம் உதவி கேட்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.


Next Story