தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்பு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவு


தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்பு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவு
x
தினத்தந்தி 24 Jun 2020 11:12 PM GMT (Updated: 24 Jun 2020 11:12 PM GMT)

தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

பியாங்யாங்,

கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது.

தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது

கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட கொரிய அரசை விமர்சிப்பது போன்ற துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜங், தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்நாட்டுடனான உறவை மொத்தமாக துண்டிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கொரிய எல்லையில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை கடந்த வாரம் வடகொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்தது.

அதுமட்டுமின்றி கொரிய எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் வடகொரியா தனது ராணுவ நிலைகளையும் பலப்படுத்தியது.இதனால் தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழலும் உருவாகியிருந்தது.

இந்த நிலையில் தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை கிம் ஜாங் அன் நிறுத்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் காணொலி காட்சி வழியாக கொரிய ராணுவ ஆணைய கூட்டம் நடைபெற்றது.அப்போது நாட்டின் ராணுவம் போர் தடுப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை திட்டங்களை ஒத்திவைக்க கிம் ஜாங் அன் உத்ததரவிட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


இதுகுறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் யோ சாங் கி கூறுகையில் “வடகொரியாவின் அறிக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்“ எனக் கூறினார்.

வடகொரியாவின் இந்த அறிவிப்பு குறித்து கொரிய நாடுகளுக்கிடையிலான ராணுவ பேச்சுவார்த்தையில் அங்கம் வகித்த முன்னாள் தென்கொரிய ராணுவ வீரர் கிம் டாங் யப் கூறுகையில் “ வடகொரியாவின் இந்த நடவடிக்கை தற்காலிகமானது. அவர்கள் தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைக்கவில்லை. ஒத்தி வைத்துள்ளனர்.எனவே தென்கொரியா விழிப்புடன் இருக்கவேண்டும்“ என தெரிவித்தார்.

Next Story