இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறது - அமெரிக்க வாழ் இந்திய டாக்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு


இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறது - அமெரிக்க வாழ் இந்திய டாக்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 28 Jun 2020 10:30 PM GMT (Updated: 28 Jun 2020 7:42 PM GMT)

கொரோனா பரவல் தடுக்க சரியான நேரத்தில் போட்ட ஊரடங்கால் இந்தியா லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறது என அமெரிக்கவாழ் இந்திய டாக்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன்களப்பணியாற்றுவதில் இந்திய டாக்டர்கள் சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு 80 ஆயிரம் இந்திய வம்சாவளி டாக்டர்கள் அங்கம் வகிக்கும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் மெய்நிகர் கூட்டத்தில் (காணொலி காட்சி வழியாக) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை நாட்டை சுயசார்புள்ளதாக ஆக்குவதற்கு உழைக்கும் வாய்ப்பாக பயன்படுத்துகிறோம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 350 பேர் என்ற அளவில் இறப்புவீதம் உள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 600 ஆக இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இந்தியாவில் 12-க்கும் குறைவாக இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி கண்டுள்ளது. இதே போன்று பல மாநிலங்கள் சிறப்பாக இருக்கின்றன. மக்களிடம் இருந்து கிடைக்கிற ஆதரவுதான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களைப் பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய், தீண்டத்தகாதவையாகவே இருக்கிறது.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. இங்கே மக்கள் அடர்த்தியும் அதிகமாகவே இருக்கிறது. சமூக ரீதியில் கூட்டம் கூடுவது என்பது வாழ்வின் இயல்பான நிகழ்வாக இருக்கிறது. மத, அரசியல் நிழ்வுகளில் கூட்டங்கள் கூடுவது வழக்கான ஒன்று. மாநிலங்களிடையே அதிகளவில் இடம் பெயர்கிற தொழிலாளர்கள் ஏராளம்.

இதில் உலகின் தலைசிறந்த நிபுணர்களின் அச்சங்களையெல்லாம் கடந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி கண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம், மக்களின் ஒத்துழைப்புதான். மக்களின் ஒத்துழைப்பு இன்றி இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்காது.

இந்தியா லட்சோப லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம், சரியான நேரத்தில் போடப்பட்ட ஊரடங்குதான்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை, எங்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். உதாரணத்துக்கு, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது இதற்கான ஒரே ஒரு பரிசோதனைக்கூடம்தான் நாட்டில் இருந்தது. இப்போது 1000 பரிசோதனைக்கூடங்கள் நாட்டில் இருக்கின்றன.

கொரோனா தொற்று பரவத்தொடங்கியபோது சுய பாதுகாப்பு கவச உடைகளையும் கருவிகளையும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்தோம். இப்போது சுய சார்புள்ள நாடாக மாறி இருப்பதுடன், அவற்றை ஏற்றுமதி செய்கிற நிலைக்கு வந்து இருக்கிறோம். இந்தியாவில் வாரத்துக்கு 30 லட்சம் என்-95 முக கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுகாதார துறையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வென்டிலேட்டர்கள் கிடைக்கிறது. இவை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்திய வம்சாவளி டாக்டர்களின் சாதனைகளும், பங்களிப்பும் கண்டு நான் பெருமிதப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் அமெரிக்க நாட்டுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டு பேசினார். அவர் இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு போட்டதால் அது கொரோனா வைரஸ் தொற்று பரவலை குறைத்ததுடன், உயிர்களையும் பாதுகாத்து இருப்பதாக பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்களை பிரதிபலித்தார்.

அமெரிக்கா வாழ் இந்திய டாக்டர்களையும் அவர் மனம் திறந்து பாராட்ட தவறவில்லை. அப்போது அவர், “உங்கள் உயிர்களை பணயம் வைத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன்களப்பணியாற்றும் நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள். உங்கள் பங்களிப்புக்கு அமெரிக்கா முழுவதும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

Next Story