வங்காளதேசத்தில் கோர விபத்து; ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் பரிதாப சாவு


வங்காளதேசத்தில் கோர விபத்து; ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 30 Jun 2020 12:49 AM GMT (Updated: 30 Jun 2020 12:49 AM GMT)

வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக கப்பல் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் கப்பல் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். தனியாருக்கு சொந்தமான கப்பல்களில் மக்கள் கட்டணம் செலுத்தி தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இதற்காக மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்வதற்காக 100க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் வகையில் ஏராளமான கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டின் மத்திய பகுதியிலுள்ள முன்ஷிகாஞ்ச் மாவட்டத்தில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு “மார்னிங் பேர்டு“ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றது.

இந்த கப்பலில் உங்கள் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தக் கப்பல் அந்த நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான புரிகங்கா ஆறு வழியாக பயணித்தது. டாக்காவின் புறநகர் பகுதியான ஷியாம்பஜாருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ஆற்றின் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலுடன் “மார்னிங் பேர்டு“ கப்பல் நேருக்கு நேர் மோதியது.

இதில் அந்த கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது. கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல்படையினர் முத்து படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். ஆனாலும் 3 சிறுவர்கள், 7 பெண்கள் உட்பட 32 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. எனினும் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த பலரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். அதேபோல் பலர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர்.

இருப்பினும் இந்த விபத்தில் பலர் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story