வட கொரியாவில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி: எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைப்பு


வட கொரியாவில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி: எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 26 July 2020 11:42 PM GMT (Updated: 26 July 2020 11:42 PM GMT)

வட கொரியாவில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பியாங்யாங், 

தங்கள் நாட்டில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அங்கு முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1 கோடியே 61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன.

அதேசமயம் சர்ச்சைகளுக்கு பெயர்போன கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு கூறி வந்தது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே எல்லைகள் அனைத்தையும் மூடியதோடு, சர்வதேச பயணிகளுக்கு தடை விதித்ததால் இது சாத்தியமானதாக வடகொரியா கூறியது.

ஆனால் இந்த விவகாரத்தில் சர்வதேச நிபுணர்கள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

வடகொரியாவில் சுகாதார கட்டமைப்பு மோசமாக இருப்பதோடு அங்கு மருந்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நிச்சயமாக அந்த நாட்டில் வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடகொரியா அதனை மறுத்து வந்தது.

இந்த நிலையில் வடகொரியாவில் தென் கொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கேசாங் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியாவுக்கு சென்ற அந்த நபர் கடந்த வாரம் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்கு வந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த நபரை தனிமைப்படுத்தி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு கடந்த 5 நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேசாங் நகர எல்லையை முழுவதுமாக மூடி சீல் வைக்க கிம் ஜாங் அன் உத்தரவிட்டார்.

அத்துடன் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கும் கேசாங் நகரில் முழு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அங்கு அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிம் ஜாங் அன் கூறுகையில் “தீங்கு விளைவிக்கும் வைரஸ் நாட்டிற்குள் நுழைந்ததாக கூறக்கூடிய ஒரு முக்கியமான சூழ்நிலை உள்ளது. கேசாங் நகரை முற்றிலுமாக தனிமை படுத்துவதன் மூலம் நாட்டின் பிற நகரங்கள், பிராந்தியங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது“ எனக் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்தும் சட்ட விரோதமாக எல்லை தாண்டி வருவோருக்கு கடுமையான தண்டனை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story