மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை: ஊழல் வழக்கில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை: ஊழல் வழக்கில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 28 July 2020 11:28 AM GMT (Updated: 28 July 2020 11:32 PM GMT)

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோலாலம்பூர், 

மலேசியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.

அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை பிரதமர் நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையில் செய்தி வெளியானது.

1எம்.டி.பி. நிறுவனத்தில் இருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 ஆயிரத்து 239 கோடி) நஜீப் ரசாக்கின் வங்கி கணக்கில் செலுத்த பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அந்தப் பணத்தில் நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நஜீப் ரசாக் அவரது மனைவி மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

ஆனாலும் தன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தொடர்ந்து மறுத்து வந்தார். இதை தனக்கு எதிரான அரசியல் ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கை என அவர் கூறினார்.

எனினும் இந்த ஊழல் வழக்கில் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு சரிந்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இது எதிரொலித்தது. அந்தத் தேர்தலில் நஜிப் ரசாக்கின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதனைதொடர்ந்து மலேசியாவில் புதிய அரசு பொறுப்பேற்றதும் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது.

இந்த நிலையில் 5 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஊழல் வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது. இதில் நஜீப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. எனவே இந்த வழக்கில் நஜீப் ரசாக்கை குற்றவாளி என கூறி நீதிபதி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 49.4 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 369 கோடியே 73 லட்சம்) அபராதமும் விதித்தார்.

இதனிடையே கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் “இந்த வழக்கு எனது பெயரையும் புகழையும் அழிப்பதற்கான ஒரு வாய்ப்பு என்பதை நான் முதல் நாளிலிருந்தே சொல்லி வருகிறேன். எனக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. இந்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீட்டு கோர்ட்டுக்கு செல்வேன். நான் எதற்கும் தயாராக உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.


Next Story