ஆபத்தான கொரோனா நோயாளிகளை முன்கூட்டியே கணித்து சிகிச்சை அளிக்கலாம்: அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு


ஆபத்தான கொரோனா நோயாளிகளை முன்கூட்டியே கணித்து சிகிச்சை அளிக்கலாம்: அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 28 July 2020 11:39 PM GMT (Updated: 28 July 2020 11:39 PM GMT)

ஆபத்தான கொரோனா நோயாளிகளை முன்கூட்டியே கணித்து சிகிச்சை அளிக்கும் வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.

நியுயார்க், 

கொரோனா பாதிப்புக்குள்ளாகிறவர்களில் ஒரு சிலர் மட்டுமே உயிராபத்தை சந்திக்கின்றனர். இவர்களின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளில் மாறுபாடுகள் இருப்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதையொட்டி அமெரிக்காவின் யேல் நியு ஹெவன் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்து, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 113 நோயாளிகளை ஆராய்ந்தனர். குறிப்பாக அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் குணம் அடைந்து வீடு திரும்பியது அல்லது இறந்தது வரையில் ஆராய்ந்தனர்.

இந்த கால கட்டத்தில் அவர்கள் வெளிப்படுத்திய மாறுபட்ட நோய் எதிர்ப்பு மண்டல பதிலளிப்பை (கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை) உற்றுநோக்கினர்.

இதில் தெரிய வந்த உண்மை, ஆரம்பத்தில் எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடு பொதுவாக இருக்கிறது.

மிதமான அறிகுறிகளை கொண்டவர்கள், காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பதிலளிப்பும், அவர்களின் உடலில் வைரஸ் துகள் அளவும் குறைவதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆபத்தை முன்கூட்டியே கண்டறியலாம்

இதுபற்றி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி அகிகோ இவாசாகி கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. மேலும், தவறான வகையிலான நோய் எதிர்ப்பு செயல்பாடுகள் கடுமையான நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளன என்பதையும், அவற்றில் சில இறப்புடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதையும் காட்டுகிறது” என்கிறார்.

தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தொற்றின் கடுமையான நிகழ்வுகளை உடைய நோயாளிகள், தங்கள் உடலில் உள்ள வைரஸ் துகள்களின் அளவிலோ அல்லது நோய் எதிர்ப்பு மண்டல எதிர்வினையிலோ எந்த குறைவும் காட்டவில்லை. சைட்டோகைன் எனப்படும் மூலக்கூறுகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சமிக்ஞைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஆரம்ப கட்ட சிகிச்சையில், எந்த நோயாளிகள் நோயின் கடுமையான வடிவங்களை உருவாக்கும் ஆபத்தில் உள்ளனர் என்பதை கணிக்கும் காரணிகளை கண்டறிந்திருக்கிறோம். இது அப்படிப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு வழிவகுத்துள்ளது” என்றனர்.

இதுபற்றி மூத்த விஞ்ஞானி அகிகோ இவாசாகி கூறும்போது, “இதனால் நோய் ஆபத்தின் சூழலை எங்களை வெளியேற்ற முடிந்தது” என்று தெரிவித்தார்.

நோய் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் சிறப்பாக பதில் அளிக்கும் நபர்கள், அதிகளவு வளர்ச்சி காரணிகளை வெளிப்படுத்துவதையும், குறிப்பாக ரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல் திசுக்களை சரி செய்யும் நோய் எதிர்ப்பு மண்டல மூலக்கூறுகளை வெளிப்படுத்துவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு தரவுகள், கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான விளைவுக்கு செல்லக்கூடிய நோயாளிகளை முன்கூட்டியே கணிக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆய்வில் அடையாளம் காணப்பட்ட அழற்சியின் காரணங்களை குறிப்பாக குறிவைக்கும் மருந்துகள், கொரோனா வைரஸ் தொற்றின் கடுமையான நிகழ்வுகளை உருவாக்கும் ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Next Story