அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் - டிரம்ப்


அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் - டிரம்ப்
x
தினத்தந்தி 30 July 2020 12:20 AM GMT (Updated: 30 July 2020 12:20 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

தினமும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கொடிய வைரசுக்கு பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

இந்த கொடிய வைரசை அழிப்பதற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதனை உறுதி செய்யும் விதமாக அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும் மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.

அமெரிக்கா முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு நேற்று முன்தினம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவர்கள் அனைவரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த தடுப்பூசியின் முந்தைய பரிசோதனைகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானது உறுதிசெய்யப்பட்டது.

கொரோனாவை எதிர்த்து நிற்பதில் நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியமானதாகும். இந்த இறுதி கட்ட பரிசோதனை வெற்றி பெற்றால் வர்த்தக ரீதியில் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியை மாடர்னா நிறுவனம் மேற்கொள்ளும்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி முதலில் தயாரானால், பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “நம்மிடம் தடுப்பூசி இருந்தால் அது பிற நாடுகளுக்கும் வழங்கப்படும். வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருவது போல் தடுப்பூசியையும் நாங்கள் அனுப்பி வைக்க வாய்ப்பிருக்கிறது” என கூறினார்.

இதனிடையே கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதை ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் ஆதரித்துள்ளார்.

இந்த மருந்து கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனற்றது என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும், டிரம்ப் அந்த மருந்து மீது தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் அதை (ஹைட்ராக்சிகுளோரோகுயின்) நம்புகிறேன். நான் அதை எடுத்துக் கொள்வேன். உங்களுக்கு தெரியும் நான் அதை 14 நாள் காலத்துக்கு எடுத்துக் கொண்டேன். நான் இங்கே இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. பல முன்னணி மருத்துவ ஊழியர்களும் அந்த மருந்தை நம்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.


Next Story