முக கவசத்தால் இப்படி ஒரு தொல்லையா? காது கேளாதோர் அனுபவிக்கும் வேதனை


முக கவசத்தால் இப்படி ஒரு தொல்லையா? காது கேளாதோர் அனுபவிக்கும் வேதனை
x
தினத்தந்தி 30 July 2020 10:45 PM GMT (Updated: 30 July 2020 9:04 PM GMT)

இங்கிலாந்தில் முக கவசத்தால் காது கேளாதோர் பல வேதனைகளை அனுபவிக்கின்றனர்.

லண்டன்,

இங்கிலாந்தில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லாம் முக கவசம் அணிந்து செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மீறினால் 50 பவுண்ட் முதல் 100 பவுண்ட் வரை (சுமார் ரூ.4,900 முதல் 9,800 வரை) அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் காது கேளாதவர்களுக்கு முக கவசம் தொல்லையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இவர்களது முகபாவனைகளும், உதடு அசைவும் முக கவசத்தால் மறைக்கப்பட்டு விடுகின்றன.

இதனால் அந்த நாட்டில் காது கேளாத 1 கோடியே 20 லட்சம் பேர் வெளியே தொடர்பு கொள்வது சிரமமாகி விட்டதால், வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காது கேளாதோர் சங்கத்தின் தலைவர் மங்கை சுதர்சனை செய்தி நிறுவனம் ஒன்று மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் சந்தித்து பேசியபோது அவர், “தனிப்பட்ட முறையில் நான் கடைக்கு செல்லவும், முக கவசம் அணிந்த மக்களுடன் கலக்கவும் பயப்படுகிறேன். நான் காது கேளாதவள் என்பது மக்களுக்கு தெரியாது. அவர்கள் என்னோடு பேசுவார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களை நான் புரிந்து கொள்ள முடியாது. இது சங்கடமாக இருக்கும். இது எனக்கு மன அழுத்தத்தை தருகிறது” என்று வெளிப்படுத்தினார்.

கடந்த மே மாதம் தேசிய புள்ளி விவர அலுவலகம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் காது கேட்பதில் பிரச்சினை உடையவர்கள், கொரோனா காலத்தில் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தொண்டு நிறுவனம் முக கவசம் அதை மோசமாக்குகிறது என்று கூறியதும் அம்பலமானது.

இதுபற்றி காது கேளாதவர்கள் ஆராய்ச்சி மற்றும் கொள்கை அமைப்பை சேர்ந்த அய்லா ஓஸ்மென் கூறும்போது, “ காது கேளாதோர் தகவல் பரிமாற்றம் செய்வது சாத்தியமற்றது. இது மிகப்பெரிய கவலை. இது சவாலாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

காது கேளாதோருடன் யாரும் உடன் செல்கிறபோது, அவர்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விதிவிலக்கு வழங்கி இருப்பது ஆறுதலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story