கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ஆச்சரிய நிகழ்வு


கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ஆச்சரிய நிகழ்வு
x
தினத்தந்தி 31 July 2020 1:47 AM GMT (Updated: 31 July 2020 1:47 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மிகவும் வித்தியாசமாக அமைந்து உள்ளது .

துபாய்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மற்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் சவுதி அரேபிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவுக்கு ஹஜ் செய்ய வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஹஜ்ஜிற்கு வரும் யாத்ரீகர்கள் கூட்டம் இந்த ஆண்டு மிகவும் குறைந்து உள்ளது. இது  வித்தியாசமான தோற்றத்தையும் உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக இங்கு மக்கள் கூட்டம் பெரிய அளவில் அலைமோதும். அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கே வருவார்கள். 

ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 25 லட்சம்  பயணிகள் ஹஜ்ஜிற்காக சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு வருகிறார்கள். இருப்பினும், தற்போதைய உலக சுகாதார நெருக்கடியால் இந்த ஆண்டு மிகவும் மாறி உள்ளது.

சமூக ஊடகங்களில் வெளிவந்த ஹஜ்ஜின் சமீபத்திய புகைப்படங்கள் யாத்ரீகர்களின் மிகச் சிறிய கூட்டத்தைக் காட்டுகின்றன.

ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் இங்கே சுற்றுவது வழக்கம். ஆனால் இப்போது, அதே கஃபாவில் 1000 பேர் சமூக இடைவெளியுடன் சுற்றுவது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. 

இந்த மாத தொடக்கத்தில், சவுதி அரேபியா நாட்டில் வசிக்கும் சுமார் 1,000 யாத்ரீகர்களை மட்டுமே ஹஜ் செய்ய அனுமதிப்பதாக அறிவித்தது. வெளிநாட்டு பார்வையாளர்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான யாத்ரீகர்கள் ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பித்த பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று  அறிகுறிகள் இல்லாத அவர்கள் 20 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், இதற்கு முன்பு ஹஜ் செய்யாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஆன்லைன் செயல்முறை முடிந்ததும், யாத்ரீகர்கள் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காக அவர்களின் செல்லுலார் சாதனங்களுடன் இணைக்கப்பட்ட கைக்கடிகாரங்களை வழங்கினர்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி சடங்குகள் முடிந்த பிறகு, ஒவ்வொரு யாத்ரீகரும் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Next Story