சுற்றுலா பயணிகளுக்காக எவரெஸ்ட் சிகரம் திறக்கப்படுவதாக நேபாள அரசு அறிவிப்பு


சுற்றுலா பயணிகளுக்காக எவரெஸ்ட் சிகரம் திறக்கப்படுவதாக நேபாள அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 4:26 PM GMT (Updated: 31 July 2020 4:26 PM GMT)

எவரெஸ்ட் உள்ளிட்ட மலைச் சிகரங்கள் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது.

காத்மாண்டு,

கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து சில தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் நேபாள அரசு, தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை மீட்கும் நடவடிக்கையாக எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களை சுற்றுலாவுக்கு திறப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நேபாளம் தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்தது.

இமய மலைத்தொடரில் அமைந்துள்ள நேபாள நாட்டில் மலையேற்றம் மற்றும் சுற்றுலா மூலம் பல மில்லியன் கணக்கில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை பெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் கடந்த வாரம் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தற்போது மலையேற்றம் உள்ளிட்ட சுற்றுலா நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை இயக்குனர் மீரா ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

Next Story