இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப் பேட்டி


இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப் பேட்டி
x
தினத்தந்தி 25 Sep 2020 11:15 PM GMT (Updated: 25 Sep 2020 8:11 PM GMT)

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினையில் உதவ விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லை பிரச்சினை, தொடர்கதையாய் நீண்டு வருகிறது. சீனாவின் அத்துமீறல்களால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது.

மாஸ்கோவில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் கடந்த 10-ந் தேதி சந்தித்து பேசி, 5 அம்ச சமரச திட்டம் ஒன்றை அறிவித்த பின்னர் இரு தரப்பு தளபதிகள் மட்டத்திலான 6-வது சுற்று பேச்சு வார்த்தை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் இரு தரப்பும் எல்லையில் படை குவிப்பை தவிர்க்க முடிவு எடுத்தது நல்ல அறிகுறியாக அமைந்திருக்கிறது.

இந்த தருணத்தில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, இதுபற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவும், சீனாவும் சிரமங்களை கொண்டிருக்கிறார்கள், அதுவும் கடினமான சிரமங்களை கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனாலும், அவர்களால் இந்த எல்லை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இதில் உதவ முடிந்தால் உதவ விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து அமெரிக்காவின் ‘வால்ஸ்டிரீட்’ பத்திரிகையும் கருத்து தெரிவித்து இருக்கிறது.

அந்த பத்திரிகை, “எல்லை மோதல் இந்தியாவை சமச்சீரற்ற பதிலை காண தூண்டுகிறது. அதன் கடற்படை வலிமையை நெகிழச்செய்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுடன் கூட்டு கடற்படை பயிற்சியை தீவிரப்படுத்துகிறது. புதிய கப்பல்களை கட்டுகிறது. இந்திய பெருங்கடலின் கடல் போக்குவரத்தை இந்தியா கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் கடலோர கண்காணிப்பு நிலையங்களின் வலையமைப்பை உருவாக்குகிறது” என கூறி உள்ளது.

Next Story