தென்கொரியாவில் பறவை காய்ச்சல்; 3.92 லட்சம் பறவை குஞ்சுகளை அழிக்க முடிவு


தென்கொரியாவில் பறவை காய்ச்சல்; 3.92 லட்சம் பறவை குஞ்சுகளை அழிக்க முடிவு
x
தினத்தந்தி 29 Nov 2020 3:34 AM GMT (Updated: 29 Nov 2020 3:34 AM GMT)

தென்கொரியாவில் இந்த ஆண்டு பறவை காய்ச்சல் முதன்முறையாக பரவ தொடங்கிய நிலையில் 3.92 லட்சம் பறவை குஞ்சுகளை அழிக்க அரசு முடிவு செய்துள்ளது.

சியோல்,

ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் இறுதியில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது.  எச்5என்8 புளூ காய்ச்சலால் பறவைகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.  கடந்த 2018ம் ஆண்டுக்கு பின் முதல் பறவை காய்ச்சலாக இது அறியப்பட்டது.

இந்த சூழலில் தென்கொரியா நாட்டின் தென்மேற்கே அமைந்த ஜியோன்புக் மாகாணத்தில் உள்ள வாத்து பண்ணை ஒன்றில் இந்த ஆண்டில் முதன்முறையாக எச்5என்8 பறவை காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.  இதனை அந்நாட்டிற்கான உணவு, விவசாயம், வனம் மற்றும் மீன்வள அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து காய்ச்சல் மற்ற பறவைகளுக்கு பரவி விடாமல் இருப்பதற்காக அந்த பண்ணையில் இருந்த 19 ஆயிரம் வாத்துகளும் அழிக்கப்பட்டன.  இந்த பண்ணையை சுற்றி 3 கி.மீ. தொலைவில் 6 கோழி பண்ணைகளும் உள்ளன.  இதனால் அடுத்த 48 மணிநேரத்திற்கு நாடு முழுவதும் பண்ணை பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஜியேன்ஜ்அப் பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு 7 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.  இந்த பகுதியை சுற்றி 10 கி.மீ. தொலைவில் அமைந்த பண்ணைகளுக்கு 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  தேசிய எச்சரிக்கை அளவில் இது தீவிர பாதிப்பு என  உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த மாகாண அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட வாத்து பண்ணையை சுற்றியுள்ள 3 கி.மீ. தொலைவிற்குள் உள்ள 3.92 லட்சம் கோழி குஞ்சுகள் மற்றும் வாத்துகளை அழிக்க முடிவு செய்து உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Next Story