பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்!


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 22 Dec 2020 12:37 PM GMT (Updated: 22 Dec 2020 12:37 PM GMT)

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ ராணுவ விருதை அதிபர் டிரம்ப் வழங்கி கவுரவித்தார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவால் பிற நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்களுக்கு ‘லீஜியன் ஆப் மெரிட்’ என்ற விருது வழங்கப்படுகிறது. இது, உயரிய கவுரவ ராணுவ விருதுகளில் ஒன்றாகும்.

இந்த விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வழங்கினார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் இருந்து மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் சாந்து பெற்றுக்கொண்டார்.

இந்திய–அமெரிக்க ராணுவ உறவை அதிகரிக்க முக்கிய பங்காற்றிய மோடியின் தலைமையை அங்கீகரிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டதாக ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உலக வல்லரசாக இந்தியாவை உருவெடுக்க செய்வதில் மோடியின் உறுதியான தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இந்திய–அமெரிக்க ராணுவ உறவை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய அளப்பரிய பணியை பாராட்டியும், உலக அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்துவதில் ஆற்றிய பணியை பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கும் இதே விருதை டிரம்ப் வழங்கினார்.

சவுதி அரேபியா, பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ரஷியா, மாலத்தீவு ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை இதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு வழங்கி உள்ளன.Next Story