எத்தியோப்பியாவில் பயங்கரம் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் 100 பேர் கொன்று குவிப்பு


எத்தியோப்பியாவில் பயங்கரம் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் 100 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2020 12:55 PM GMT (Updated: 24 Dec 2020 12:55 PM GMT)

எத்தியோப்பியாவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 100 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அடிஸ் அபாபா: 

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. அந்த நாட்டின் பிரதமராக அபே அகமது உள்ளார். இவர் 2018–ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.

எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள டைக்ரே பிராந்தியத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழு அரசுக்கு எதிராக உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வருகிறது.

கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினருடன் சண்டையிட்டு டைக்ரே மாகாணத்தின் முக்கிய பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவம் தனது இறுதி கட்டப்போரை தொடங்கியது.

டைக்ரே மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ராணுவம் தரை வழியாகவும், வான் வழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

இன ரீதியிலான வன்முறைகள் 

இந்த இருதரப்பு மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் சுமார் 50 ஆயிரம் பேர் உயிர் பிழைக்க வேண்டி அண்டை நாடான சூடானுக்கு அகதிகளாக சென்றனர். டைக்ரே பிராந்தியத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெனி‌ஷங்குல்–குமுஸ் என்ற பிராந்தியத்தில் சமீபகாலமாக இன ரீதியிலான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்த வன்முறையை சூழலைப் பயன்படுத்தி அங்கு பயங்கரவாத குழுக்கள் காலூன்ற தொடங்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக பெனி‌ஷங்குல்–குமுஸ் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் 

இந்த நிலையில் பெனி‌ஷங்குல்–குமுஸ் பிராந்தியத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பெக்கோஜி என்ற கிராமத்துக்குள் நேற்று  இரவு ஏராளமான பயங்கரவாதிகள் புகுந்தனர்.

துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளை சூறையாடினர். வீடுகளுக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அப்பாவி மக்களை தரதரவென வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர்.

பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 30–க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

பிரதமரின் வருகைக்குப் பின்... 

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

எத்தியோப்பியாவின் பிரதமர் அபே அகமது, பெனி‌ஷங்குல்–குமுஸ் பிராந்தியத்துக்கு வந்து சென்ற மறுநாள் பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் அபே அகமது பெனி‌ஷங்குல்–குமுஸ் பிராந்தியத்துக்கு சென்று, அங்கு அமைதியை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பிராந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story