புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள் - இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல்


புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள் - இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2020 4:10 AM GMT (Updated: 26 Dec 2020 4:10 AM GMT)

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தென்படும் 7 அறிகுறிகள் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

லண்டன்,

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்தை தீவிர ஆய்வுகளுக்கு பின்னர் விஞ்ஞானிகள் மற்றும் மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு புதிய வடிவம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என்பதுதான் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இங்கிலாந்து உடனான வர்த்தக தொடர்பு மற்றும் விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன.

பொதுவாக கொரோனா வைரஸ் உள்பட எந்த ஒரு வைரசும் உருமாற்றம் பெறுவது என்பது இயற்கையான ஒன்றாகும். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா இதுவரையில் பல்வேறு வடிவங்களில் மாறியிருக்கிறது. இப்போது இங்கிலாந்தில் காணப்படும் வைரசின் வடிவம் வி.யு.ஐ. 202012/01 மற்றும் பி 1.1.7 என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் தன்மைகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த உருமாற்றம் பெற்ற வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் ஏற்கனவே உள்ள கொரோனா வைரசின் அறிகுறிகளான காய்ச்சல், ஜலதோஷம், தொண்டை வலி, நாவில் சுவையின்மை உள்ளிட்டவை இந்த புதிய வகை கொரோனாவிற்கும் அறிகுறிகளாக கூறப்பட்டுள்ளது. 

இவற்றுடன் மேலும் 7 அறிகுறிகள் தென்படுவதாகவும் இங்கிலாந்து சுகாதாரத்துறை தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி சோர்வு, பசியின்மை, தலை வலி, வயிற்றுப்போக்கு, மன குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு ஆகிய 7 அறிகுறிகள் புதிய கொரோனா வைரசால் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story